வைணவத்தைப் பற்றியும் வைணவர்களைப் பற்றியும் அறிய விரும்புவோருக்கு, அவர்களது முயற்சிக்குத் தடையாக ஒரு மெல்லிய திரை இருக்கிறது. அது வைணவ பரிபாஷை. அந்தத் திரையை அகற்றி, வைணவத்தின் சுகந்தத்தையும், சூட்சுமத்தையும், சுகானுபவத்தையும் அனுபவிக்கும்படி செய்திருக்கிறார் பேராசிரியர் ஆர்.ராஜகோபாலன். ஒரே நேரத்தில் வைணவ சார்போடும், பேராசிரியப் பெருநோக்கோடும் எழுத முடிந்திருக்கிறது அவரால்.
புத்தகத்திலிருந்து சில பகுதிகள்: இன்று, தமிழகத்தில் உள்ள பிராமணர்கள், வந்தேறிகளான ஆரியர்களின் வாரிசுகள் என்று சொல்லப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. (பக்.35) தொல்காப்பியத்தில் ‘அறிவர்’ என்ற சொல்லாட்சி, கற்றறிந்தோரைக் குறிப்பிடுகிறது. அது ஜாதிக் குறியீடோ, குலக் குறியீடோ அல்ல. (பக்.36), 12 ஆழ்வார்களில் நான்கு பேர் தான் பிராமணர்கள். (பக்.41), மாத்வர்கள் வைஷ்ணவ பிராமணர்கள் என்றும், ராமானுஜரின் சீடர்கள் ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். (பக்.43), தாழ்த்தப்பட்ட ஜாதியினரைத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு அவர்களுக்கு மேல்கோட்டையிலுள்ள திருநாராயணன் கோவிலில் வழிபடும் உரிமையைக் கொடுத்தார் ராமானுஜர். (பக்.54) ஸ்ரீ வைஷ்ணவர்கள் பற்றிய தகவல்கள் முழுவதும் உள்ளது என்று சொல்ல முடியாது என்றாலும், இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
சுப்பு