முகப்பு » ஆன்மிகம் » பழனி முருகன்

பழனி முருகன் வழிபாட்டில் காவடிகள்

விலைரூ.230

ஆசிரியர் : க.கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: காவ்யா

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழனின் தொன்மைக் கலைகளில் ஒன்று, காவடி ஆட்டம். குன்றின் மேல் நிற்கும் முருகனை வழிபட, பூஜைப் பொருட்களை காவடியில் கட்டிக் கொண்டும், காட்டு விலங்குகள் வராமலிருக்க ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்லும், ‘காவடி’யின் கதையை, இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது.
சக்திமலை, சிவமலையை கட்டிக் காவடியாக இரு மலைகளையும் இடும்பன் பழனியில் தூக்கி வந்து, முதலில் தண்டாயுதபாணியை வணங்கி அருள் பெற்றான். காவடி தோன்றிய பழனியில் உள்ள, பழனி ஆண்டவர் கல்லூரி தமிழ் பேராசிரியர் இந்த ஆய்வை பக்தியுடனும்,மொழி நுட்பத்துடனும் செய்து முடித்துள்ளார்.
பழனியில் அக்கினி நட்சத்திர விழா, தைப்பூச விழா, பங்குனி உத்திர விழாவில் வரும் காவடிகளையும், அதன் சிறப்புகளையும் பதிவு செய்துள்ளார். காவடி எடுத்து வருவோரின் நேர்த்திக் கடன், வேண்டுகோள், விருப்பங்களையும், அவர்களது பக்திப் பரவச அனுபவங்களையும் கேட்டுப் பதிய வைத்துள்ளார்.
பால், பன்னீர், பூ, விபூதி, தீர்த்தம், இளநீர், அன்னம், தயிர், சர்க்கரை காவடிகளை காண வைக்கிறார். காவடி ஆட்டம், சுவாமி ஆட்டம், வேலன் ஆட்டம், வழிநடைப் பாடல்களையும் காட்டுகிறார்.
பழனி மலைக்கோவில் வரலாறு, கல்வெட்டுகள், போகர் சித்தர் அமைத்த நவபாஷாண சிலையின் சிறப்புகள், சங்க இலக்கியத்தில்   ஆவினன்குடி எனும் பழனி பற்றிய குறிப்புகளை விரிவாகத் தருகிறார்.
பழனம் என்றால், வயல்; வயல் சூழ்ந்த பகுதி பழனி ஆயிற்று என்றும், பொதினியே பழனி என்றும், திருமுருகாற்றுப்படை, அகநானூறு, திருப்புகழ் இலக்கியங்களைக் கொண்டு விளக்குகிறார்.
முருகனுக்கு காணிக்கையாக குழந்தைகள், யானை, மயில், மான், பசு, சேவல் தரப்படுகின்றன. தலைமுடி காணிக்கை, துலாபாரம், தானியங்கள் காணிக்கை, பொங்கல் வைத்தல், சொத்து காணிக்கைகள் விதவிதமாக விளக்கம் பெற்றுள்ளன.
தீர்த்தக்காவடியும், ஆட்டமும், பாட்டும், அன்னதானமும், நாதசுரம், மேளமும் தமிழனின் கலை வாழ்வைக் கண்முன் காட்டுகிறது.   நோய் தீரவும், குழந்தை வேண்டியும் காவடி எடுக்கின்றனர். 18 அடி வேல் கம்பியால், 16 வயது சிறுவன் அலகுக்காவடி எடுப்பது ஆச்சரியம் தான்.
உடம்பெல்லாம் கொக்கி வளையத்தில் பழங்கள், அலகுக்காவடி தோளில், பார்த்தவர் பிரமித்து நிற்கிறார்; காவடி எடுத்தவர் தன்னை மறந்து ஆடுகிறார்; அது எப்படி என்பதை திறனாய்வு செய்கிறார் ஆசிரியர்.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us