‘இலக்கியத்தைக் கற்று துறைபோன பேராசிரியர்கள், தற்கால நவீன இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ளாதிருப்பதே ஞானம் என்று கருதிக் கொண்டிருந்தார்கள்’ (பக்.100). இந்தச் சூழ்நிலையில், இலக்கியத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கிய ரொட்டியின் எந்தப் பக்கத்தில் வெண்ணை தடவப்பட்டிருக்கிறது என்ற ஆராய்கிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுகிறவர்கள் ஒன்று கூடி, சிறு பத்திரிகைகளைத் துவங்க நேர்ந்தது (பக்.101).
என் நினைவிற்குத் தெரிந்த வகையில், 1970களில், துவக்கப்பட்ட இலக்கியச் சிறு பத்திரிகைகள் ‘கசடதபற, வாசகன், சதங்கை, நீலக்குயில், தெறிகள், வானம்பாடி, பிரக்ஞை, வைகை, பாலம், கொல்லி பாவை, சுவடு, விழிகள், யாத்ரா, சிகரம், இன்று, தர்சனம், காற்று, இலக்கிய வெளிவட்டம், படிகள், விவேக சித்தன், வேள்வி, வண்ணங்கள், உதயம்’. இதுவரையில், வேறு எந்த பத்தாண்டுகளிலும், எண்ணிக்கையில் இந்த அளவு இலக்கிய சிற்றேடுகள் வெளியானதில்லை என, எழுதுகிறார் மாலன்.
இலக்கிய சிறு பத்திரிகைகளின் வீரியமான காலம் மற்றும் வீழ்ச்சி பற்றி மாலன் எழுதியதைப் படிக்கும் போது, காலப்போக்கில், சில படைப்பாளிகளுக்கும் வெகுஜன இதழ்களுக்கும், சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதாகத் தோன்றுகிறது. மற்றபடி, புதுமைப்பித்தனுக்கும் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அறிய விரும்புவோரும், சங்கரன்கோவில் தருமகர்த்தாவால் மகாகவி பாரதியாருக்குக் கொடுக்கப்பட்ட பேனா எப்படி இடம் மாறியது என்று தெரிந்து கொள்ள விரும்புவோரும், தமிழ் சிறுகதை என்னும் ஜீவ நதியில் முங்கிக் குளிக்க முயல்வோரும், கயல் பருகிய கடலைத் தனதாக்கிக் கொள்ளலாம்.
–சுப்பு