சாகித்ய அகாடமி வெளியிட்ட தெலுங்குப் புதினமான யார்லகட்ட லட்சுமி பிரசாத் எழுதிய, ‘திரவுபதி’ நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல் என்னும் மீட்டுருவாக்க பாணியில் எழுதப்பட்ட கதை அது. இந்திய மொழிகள் அனைத்திலும், இப்படியான ஒரு போக்கில், மகாபாரதம் திரும்பத் திரும்ப எழுதப்படுகிறது. ஆயிரக்கணக்கான நூல்கள் இப்படி வந்திருக்கின்றன.
மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல் என்னும் வகையில் பல்வேறு விதமான பார்வைகள் உள்ளன. அவற்றில், முதன்மை பெறுவது எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் எழுதிய, ‘இரண்டாம் இடம்’ தான்.
தொடர்ந்து, வி.ஸ.காண்டேகர் மராட்டிய மொழியில் எழுதிய ‘யயாதி’, பைரப்பா, கன்னடத்தில் எழுதிய ‘பருவம்’, ஐராவதி கார்வே, மராட்டிய மொழியில் எழுதிய ‘யுகாந்தா’, நந்தகிஷோர் ஆச்சார்யா, இந்தியில் எழுதிய ‘உடல்களுக்கு அப்பால்’, எம்.வி. வெங்கட்ராம் தமிழில் எழுதிய ’நித்யகன்னி’, சமரேஷ் பாசு, வங்க மொழியில் எழுதிய ‘சாம்பன்’ என, இந்தப் பட்டியல் நீளும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’, ஜெயமோகனின் ‘வெண்முரசு’, பிரபஞ்சனின் ‘மகாபாரதம்’ நூல்களையும் இந்தப் புள்ளியில் இணைக்கலாம்.
இந்தி எழுத்தாளர்களான தேவ்தத் பட்நாயக், குருசரண் தாஸ் பட்டாச்சார்யா போன்றோரின் நூல்களில் தொக்கி நிற்கும் உபன்யாச பாணி எழுத்து வகையிலும், வெகுஜன ரசனை அடிப்படையிலும் எழுதிய பாலகுமாரனையும், சோ.ராமசாமியையும், நா.பா.,வையும் இங்கு நினைவுகூறலாம்.
சமீபத்தில் அமிஷ் திரிபாதி வகையறாக்கள், சிவனை கதாநாயகனாக வைத்து எழுதிய சில நூல்கள் வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டிருப்பதால், வண்ண வண்ணமாக வந்திறங்குகின்றனர் மகாபாரத மாந்தர்கள்.
திரவுபதி கதைக்கு வருவோம். காவிய அழகியலுடன் கூடிய சுவாரசியமான பார்வைகளாக மாற்றிப் பார்த்திருக்கிறார் ஆசிரியர். பல இடங்களில் முரண்பாடான தளத்தில் கதை செயல்பட்டாலும், காவியத் தன்மையுடனும், புதிய பார்வையுடனும் விரிகிறது.
பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்று கர்ணனிடம் எடுத்துச் சொல்லி, அவனை தங்கள் வழிப்படுத்த கிருஷ்ணன் பேசும் உரையாடலையும், கர்ணன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு, தன்னால் வரமுடியாது என்று மறுக்கும் காட்சிப் புலத்தையும் அழகாக விவரித்திருக்கிறார்.
பாண்டவர்களின் வெற்றி நிச்சயம் என்று கர்ணன் பேசுவது முற்றிலும் முரண்பாடான கட்டமைப்பு. திரவுபதி கதாபாத்திரத்தை முன்வைத்து, அவளது பார்வையில் மிக வித்தியாசமான பார்வையைக் கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர். ஆனால், இந்த கதையாடல், இதற்கு முன்பு வந்திருக்கும் மகாபாரதக் கதையாடல்களின் நீண்ட பாரம்பரியத்தில் முக்கியமானதாக இல்லை.
இருந்தும் இது முக்கியத்துவம் பெறுவது, அதனுடைய காவிய அழகியல் தன்மை கொண்ட கருத்தாக்கத்தினால் தான். மிக மிக அற்புதமான மொழியாக்கத்தில், இந்த புதினம் மேலும் மிளிர்கிறது. பரத வம்சத்தின் வம்சாவளிக் கதையாக, சூதர்களால் பாடப்பட்ட ‘ஜெயா’ என்ற இதன் மூல வடிவம், பிற்கால கதைசொல்லிகளால், பல்வேறு உபகதைகளின் இடைச்செருகல்களினால், பல்வேறு கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வைக்கப்பட்டு, மகாபாரதமாக மாறிப்போயிருக்கிறது.
இதன் மூல வடிவத்தைத் தேடுவதும், இதன் உயிர்ப்பை மீளுருவாக்கம் செய்வதுமே இன்றைய நவீன கதைசொல்லிகளின் மகத்தான சவால். (கட்டுரையாளர், ‘பொம்மக்கா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்)
– கவுதம சித்தார்த்தன்