ஆசிரியர்-ச.கருப்பையா,மா.முத்துராமலிங்கன்.வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. நூலாசிரியர் ச.கருப்பையா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி என்ற ஊரில் நிலபுலன்கள் உள்ள வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.இவருடைய சித்த மருத்துவ ஆர்வம் தன் தாயாரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட செல்வம். அத்தாணி வட்டாரச் சுற்றுப்புற மக்களுக்குப் பணம் எதுவும் வாங்காமல் வாழ்வு முழுவதும் மருத்துவத் தொண்டு செய்தவர் அந்த அன்னை. அதே தொண்டைத் தொடர்ந்து வருகிறார் கருப்பையா.குறிப்பாக நச்சுப் பூச்சிகள் கடிகளுக்கு இவருடைய மருத்துவம் சிறப்பானது.சிக்கலான பிரச்சினைகளுக்கு அறந்தாங்கி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தூண்களில் ஒரவராகவும் சித்த மருத்துவராகவும் இயங்கி வரும் தோழர்கள் முத்துராமலிங்கம் அவர்களைக் கலந்து ஆலோசித்துத் தெளிவு பெற்றுக்கொள்வார்.சில சிறப்பு மருந்துகள் செய்வதற்காக மூலிகைகளைத் தேடத் தொடங்கிய இவர் நம் மக்கள்தம் காலைச் சுற்றிக்கிடக்கும் அபூர்வ மூலிகைகளை அறியாமல் அப்பாவிகளாய் வாழுவதைக் கண்டு வேதனையடைந்தார்.இதுவே ஒரு மூலிகை நூல் உருவாக்கும் ஆசையாக இவருக்குள் வளர்ந்தது.ஆண்டுக் கணக்கில் மூலிகைகளைத் தேடி அலைந்தார்.இதில் அவருக்கு மிகுந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்தவர் முத்துராமலிங்கன். இப்படி ஊர் ஊராக அலைந்து தொகுக்கப்பட்டது தான் இந்த அறிய மூலிகை நூல்.தொகுக்கப்பட்ட தகவல்களை ஒழுங்குப்படுத்துவதிலும், சித்த மருத்துவச் சுவடிகளைப் பரிசீலித்து ஒவ்வொரு மூலிகைக்குமுரிய மருத்துவப் பண்புகளை விளக்குவதிலும் முத்துராமலிங்கத்தின் பங்கு முக்கியமானது. இந்த நூல் சித்த மருத்துவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி என்பதில் அய்யமில்லை.