நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிய வெளி ரங்கராஜனின் கருத்தோட்டங்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். வெளி ரங்கராஜன், கலை இலக்கிய தளத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி
வருபவர். தான் வாசித்த புத்தகங்கள் பற்றிய தனது விமர்சனத் தன்மையற்ற எளிய மதிப்பீடுகளை நம் முன் வைக்கிறார்.
புத்தகங்களைப் பற்றிய அறிமுகமாகவும், வாசிப்பவர்களுக்குத் தேவையான முன்திறப்புகளையும் வழங்கும் விதமாக இந்தப் புத்தகம் உள்ளது. விமர்சன மதிப்பீட்டு அளவுகோல்களுக்கான எந்த விதமான நெருக்கடிகளுமற்று, எளிய அறிமுகங்களாக அதே சமயம் சுருக்கமாகவும், செறிவானதாகவும் இந்த விமர்சனங்கள் இருப்பது சிறப்பம்சம். இசைக் கலைஞர் வீணை தனம்மாள், நாடகக் கலைஞர் மதுரகவி பாஸ்கரதாஸ், ராமானுஜம், ந.முத்துசாமி, கிரீஷ் கர்னாட், ஸ்பெயினின் லோர்க்கா, கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ, இலக்கியத்துக்கான முதல் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவபட்டா என, கலவையாகப் பல தரப்பட்ட புத்தகங்கள் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது.
-பொன். வாசுதேவன்