‘ஒல்காப் புலமை தொல்காப்பியத்திற்கு உரையிடையிட்ட விரகர் கல்லாடர்’ எனும் பாராட்டிற்குரியவர் கல்லாடனார்.
அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நூல்களுள் சில பாடல்களை எழுதிய சங்ககாலக் கல்லாடனார்; பதினோராம் திருமுறையில் காணும், ‘கண்ணப்பர் மறம்’ பாடியகல்லாடனார்; ‘கல்லாடம்’ எனும் அகப்பொருள் நூலைப் பாடிய கல்லாடனார்; தொல்காப்பிய உரைகண்ட கல்லாடனார் என, கல்லாடனார் பெயர் கொண்ட புலவர் பலர் வாழ்ந்துள்ளனர்.
கால வேறுபாடு காரணமாக, மூவர் என்பாரும், நால்வர் என்பாரும் உளர் என, நிறுவியுள்ளார். தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்குப் புகழ்பெற்ற உரை, சேனாவரையர் உரை. அதிகம் கண்டுகொள்ளப்படாதது, கல்லாடனார் உரை. கல்லாடனாரின் உரை இடையியல், 10வது நூற்பா வரையே கிடைத்திருப்பினும், எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலிருந்தும், 84 மேற்கோள் பாடல்களைக் காட்டி உரை எழுதியிருப்பது, கல்லாடனார் தம் இலக்கிய புலமையைக் காட்டுகிறது.
முன்னவர் உரையைத் தழுவி எழுதுபவராயினும், மறுக்க வேண்டிய இடங்களில் நனி நாகரிகமாய் மறுத்தும், விளக்க வேண்டிய இடங்களில் விளக்கியும் செல்கிறார். வேற்றுமை மயக்கத்திற்கு இவர் தந்திருக்கும் விளக்கம், பாராட்டுதற்குரிய ஒன்று. இத்தக விரிவானதொரு விளக்கம், பிறர் எவரும் தராத ஒன்று.
‘ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதியாகும்’ (கிளவி:8) எனும் நூற்பாவில், ‘த,ற,ட’ எனும் எழுத்துக்களின் வைப்பு முறைக்கு கல்லாடனார் கூறும் ஆய்வுரை, பிறர் எவரும் மேற்கொள்ளாதது. ‘மாறோக்கம்’ என்பது, கொற்கை சூழ்ந்த நாடு என்பதை, இவர் உரையின் மூலமே (பெயர்: 10) அறிந்து கொள்ள முடிகிறது. ‘பால்மயக்குற்ற ஐயக்கிளவி எனும் நூற்பாவிற்கு (கிளவி: 23), ஐயம் என்பதை, கண்டவிடத்து ஐயம், காணாவிடத்து ஐயம் என, பிரித்துக் காணுவர் கல்லாடனார்.
இந்நுட்பமும் பிறர் கூறாதது. இவ்வாறு, கல்லாடனார் உரைத்திறனுடன், ஏனைய உரையாசிரியர்களின் உரைத்திறனையும் இந்நூலுள் விளக்கியுள்ளார் நூலாசிரியர். மேலும், தொல்காப்பியம் பொருளதிகாரம் முழுமைக்கும் பேராசிரியரால் எழுதப்பட்ட உரை, காகிதத்தில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியாக, லண்டனில் உள்ள பிரிட்டன் நூலகத்தில் உள்ளது; இதுவரை அச்சாகவில்லை எனும் அரிய செய்தியும், இந்நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலவர் சு.மதியழகன்