இந்த நூலில், ஆன்மிக தேடல்கள் பலவற்றிற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘உடல் மனதைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது மனம் உடலைக் கட்டுப்படுத்துகிறதா’ என்ற வினாவிற்கு தரப்பட்டுள்ள, ‘ஒட்டக குரு’ விளக்கம் (பக். 16), இரவில் படுக்கும் முன் சொல்ல
வேண்டிய ஸ்லோகம் (பக். 24), கார்த்திகை தீபம் கொண்டாடுவதன் தத்துவம் (பக். 35), பீமன், அர்ச்சுனன் இருவரும் செய்த பூஜையில் உள்ள வேறுபாடு (பக். 42), தத்தாத்ரேயர் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக் கொண்ட விவரம் (பக். 102) ஆகியவை பயன் உள்ளவை.
தருதலுக்கும் கொடுத்தலுக்கும் உள்ள வித்தியாசம் (பக். 111), ‘நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை’ என்ற சொற்றொடரின் விளக்கம் (பக். 113), கண்தானம் செய்வோரின் உயர்வு (பக். 132), இன்று அதர்மமான வழியில் நடப்போர் சவுக்கியமாக இருப்பதன் காரணம் (பக். 169), இன்றைய மாணவர்கள் பெற வேண்டிய பண்புகள் (பக். 174), பக்தி வந்து விட்டது என்பதை எப்போது அறியலாம் என்ற செய்தி (பக். 180) ஆகியவை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை.
அதேபோல், கபால கணபதியின் சிறப்புகள் (பக். 186), திருமணச் சடங்குகளில் சப்தபதிச் சடங்கை மணமக்கள் செய்வதன் தாத்பரியம் (பக். 199), அமாவாசையன்று நல்ல காரியங்கள் செய்வதன் விளக்கம் (பக். 208), கருடதரிசனம் செய்வதால் உண்டாகும் பலன்கள் (பக். 215) ஆகியவையும் படிக்க வேண்டியவையே. ஆன்மிக அன்பர்களுக்கு பயனுள்ள நூல் இது.
-டாக்டர் கலியன் சம்பத்து