‘தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம்’ என்று கூரத்தாழ்வானாலும், ‘அறிவு தரும் பெரிய திருமொழி’ என்று சுவாமி தேசிகராலும் போற்றப்பட்டவை திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள். அவரது பாசுரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில், இரண்டாம் ஆயிரமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலில், பாசுரங்கள் பதம் பிரித்தும், பாசுர அடிகளில் நிறுத்தக் குறியீடுகள் அளிக்கப்பட்டும், இருமுறை சேவிப்பதற்கான அடையாளம் இட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளன.
மேலும், திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கும் மூலவர், தாயார், உற்சவர், தீர்த்தம், விமானம், தலவிருட்சம், பிரத்யட்சம் முதலான
விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் பிற்சேர்க்கையில், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மேலும் சில திவ்யதேசங்களின் பட்டியல், பாசுர எண்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் விற்பனைத் தொகை, கோவை, கிருஷ்ணராயபுரம், வேணுகோபாலப் பெருமாள் கோவில் திருப்பணிக்கு பயன்படும் என, வெளியீட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் கலியன் சம்பத்து