தாகூர் நல்ல படைப்பாளி. கவிதை, கதை, நாடகம் போன்றவற்றில் முத்திரை பதித்தவர். அவர், இந்த சிறுகதைத் தொகுதியில், பெண்கள் தம் வாழ்க்கைப் போக்குகளில் எதிர்கொள்ளும் கொடுமைகள், துயரங்கள், தன்னிச்சையான மன நிலை, இவற்றோடு லட்சியத் தாகம் முதலானவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை மையப்படுத்திய இச்சிறுகதைகள் யதார்த்தமான தளத்தில் நகர்கின்றன. தாகூரின் கதைகளில் பெண்களுக்கான பரிவும், பாசமும் பல கதைகளில் தென்படும். இந்நூலில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் அவ்வகையான போக்குகளில் உள்ளன. தாகூர் படைத்துள்ள கதைமாந்தர்களில் பலர், அவர்கள் ஆணானாலும்,பெண்ணானாலும் இலக்கிய ரசனை உள்ளவர்களாக இருப்பதுண்டு. இந்நூலில் உள்ள கதைகள் சிலவற்றில் அத்தகைய கதைமாந்தர்கள் இடம்பெற்றுள்ளனர். இதிலிலுள்ள கதைகளை மொழிபெயர்ப்பு என்று தெரியாதவாறு சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார் சு.கிருஷ்ணமூர்த்தி. வங்க மொழிபெயர்ப்பில் தேர்ந்தவர் அவர். நெருடல் இல்லாது எளிமையாக அமைந்திருப்பதற்கு நேரடி மொழிபெயர்ப்பும் ஒரு காரணம்.
-ராம.குருநாதன்