இந்நூல், அளவில் சிறிதாயினும் ஆழமான ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் இலக்கணத்துள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை வழியிலமைந்த வாழ்வியல் இலக்கணம் உள்ளது. ஐந்திணைகளுக்கும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என உட்பிரிவுகள் உண்டு. இவற்றுள் உரிப்பொருள் என்பது அவ்வத்திணைகளுக்குரிய அகப்பொருள் ஒழுக்கம் குறித்து வருவது. அன்பின் ஐந்திணையன்றி கைக்கிளை, பெருந்திணை என இரண்டு உள்ளன. உரிப்பொருள்களை உணர்வுகள் எனக் கொண்டு, தொல்காப்பியர் வழிநின்று கண்டு, ஏற்படும் முரண்பாடுகளைப் போக்க முனைந்துள்ளார் நூலாசிரியர். எடுத்துக்காட்டாகக் குறுந்தொகைப் பாட்டொன்று, குறிஞ்சி ஒழுக்கத்தை (புணர்ச்சி) உடையதேனும் மருதம் என (ஊடல்) குறிக்கப்படுவது ஏன் என, வினா எழுப்பி விளக்கம் அளித்துள்ளார். கைக்கிளை, பெருந்திணை தனித்தனியெனக் காணாமல் ஒத்த இசைவுடைய ஒரே கிளையிலிருந்து செயல்படும் பண்பாக அணுக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆய்வு மாணவர்களேயன்றி, ஆய்வு மனம் கொண்டவர்களும் படித்துப் பயனடையத் தக்க நூல் இது.
கவிக்கோ ஞானச்செல்வன்