இந்திய சமூக வரலாற்றில் சமயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமயம், ஜாதி ஆகியவற்றைக் குறித்த பாடத்துறையோ, ஆய்வுக் கழகமோ தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கல்விச் சூழலில் இல்லை. இதனால், சமூகவியல் ஆய்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்தியா – இலங்கை – கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எழுதி, மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்திய முக்கியமான கட்டுரைகளை தொகுத்துத் தந்துள்ளனர் ரவி வைத்தீஸ்வரன் மற்றும் ரா.ஸ்தனிஸ்லால் ஆகியோர். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள், விளிம்புநிலை கருத்தாடல், பின் அமைப்பியல், பின் காலனியம் போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் சமய, பண்பாட்டு அரசியல் குறித்து நுட்பமான கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை தேடும் நோக்கில் உரையாடலை துவக்கியுள்ளன.
தொகுப்பில் முதலில் இடம் பெற்றுள்ள ந.முத்துமோகனின் கட்டுரை, ‘நமது மதங்களை உருவாக்கியது யார்?’ என்ற சுவாரசியமான கோள்வியிலிருந்து துவங்குகிறது. இக்கட்டுரை சமயம் தனிநபர் சார்ந்த தனிப்பிரிவு என்றும்; மதச்சார்பற்றது என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த விஷயம் என பிரிக்கும் வரையறை ஐரோப்பிய காலனிய காலகட்டத்தில் தான் உருவானது என்ற கருத்தை முன்வைக்கிறது.
வீ.அரசுவின் கட்டுரை, காலனிய காலத்தின் துவக்கத்தில் எழுச்சி பெற்ற தமிழக சமய பண்பாட்டு சீர்திருத்த இயக்கங்கள் குறித்து ஆராய்கிறது.
பொ.வேல்சாமி முதன் முதலாக தமிழில் அச்சுவடிவில் உருவான மிக முக்கியமான வைதிக சிந்தாந்தப் பிரதிகளை பட்டியலிட்டு அலசி ஆராய்கிறது. மேலும், பலஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.
இந்த வகையில் இந்நூல் சமயம் குறித்த புரிதலை நோக்கி நம்மை நகர்த்துகிறது. ஆனால் இந்தியாவில் சமயம் என்பது தனி மனித ஒழுக்கத்துடன் , கலாசாரத்துடன் தொடர்புடைய மன சிந்தனை என்பதை ஆய்வு செய்திருந்தால், புரிதல் அதிகரிக்க உதவியிருக்கும்.
பரிதி