இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மகாதேவபுரம், மழையின்றி, தண்ணீர் இன்றித் தவித்தபோது, தாசி கமலாம்பாள் அங்கு வந்து, அவ்வூர் நடராஜர் சன்னிதியில் நடனமாடி, மழையை வரவழைத்தாள் என்ற செய்தியுடன் நாவல் தொடங்குகிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஊஞ்சல் பத்திரிகை ஆசிரியர் அமிர்தலிங்கம், பிரபாகர் என்ற செய்தி சேகரிப்பவரை அந்த ஊருக்கு அனுப்புகிறார்; அவன், அஸ்வதி என்ற பெண்ணுடன் மகாதேவபுரம் சென்று உண்மையை அறிந்து வரப் புறப்படுகிறான். அவ்வூரில் அவர்களுக்கு ஏற்பட்ட
அனுபவமே நாவலாகிறது.
இந்நாவலில் ராமசுந்தரம் என்ற சாது, ஜதிப்பெட்டியுடன் அரவாணி, தாசி கமலாம்பாள், கோவில் குருக்கள் மற்றும் சில பாத்திரங்களின் செயல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. எல்லாம் ஈசன் செயல் என்பது போல் சிவனின் ஆனந்த தாண்டவம் பிரபாகர் மனதில் தோன்றியதாக கூறி நாவல் நிறைவு பெறுகிறது.
நாவலின் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன், பேராசிரியர் அருள் சிவசேகரனின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வெளியிட்டிருப்பது, வாசகர்களுக்குப் பல புதிய செய்திகளைத் தரும் என்பதில் ஐயமில்லை. அனைவரும் படித்து இன்புறலாம்.
டாக்டர் கலியன் சம்பத்து