இலக்கியத்தையும், உணவையும் கதம்பமாக தொடுத்து, காலச்சுவடு பதிப்பகம் வரும் ஆண்டுக்கான சுவையான நாட்காட்டியை உருவாக்கி உள்ளது.
சமைத்த உணவை மையமாகக்கொண்டு, ‘அடிசில்’ என்ற பொருளில், 2017-ம் ஆண்டு மாதாந்திர நாட்காட்டி தமிழில் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த நாட்காட்டியின் முதல் பக்கத்தில், உணவு எடுத்து செல்லும் பித்தளை அடுக்குப்போணியின் படம் இடம்பெற்றுள்ளது. சர்க்கரை பொங்கலின் ருசி, ஜனவரி பக்கத்தில் பொங்குகிறது.
அடுத்தடுத்த மாத பக்கங்களில்,
* உணவை பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய ருசியான வர்ணனைகள்
* பழந்தமிழ் இலக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ள பகுதிகள் ஆகியவை தனித்தனியாக இடம் பெற்று உள்ளன.
‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. இது பிப்ரவரியில் தங்க வரியாக பொறிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம், முக்கூடற்பள்ளு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை, சீவக சிந்தாமணி, திருக்குறள் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுபற்றிய குறிப்புகள் நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன.
பிரபல எழுத்தாளர்கள் லா.ச.ரா.,வின், அபூர்வ ராகம புத்தகம், கி.ராஜநாராயணனின், ‘கன்னிமை’, அம்பையின், ‘வெளிப்பாடு’, தி.ஜானகிராமனின், ‘மோகமுள்’, நாஞ்சில் நாடனின், ‘மதியக் காட்சி’, ‘ஆங்காரம்’, செங்கை ஆழியானின், ‘ஒடியல் கூழ்’, பெருமாள் முருகனின், ‘ஆலவாயன்’, பிரபஞ்சனின், ‘பிரும்மம்’, ‘ருசி’, தஞ்சை பிரகாஷின்,’ ‘மேபல்,’ சுப்ரபாரதிமணியனின், ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ போன்ற படைப்புகளில் இருந்து, உணவுப் பண்டம் சார்ந்த வருணனையும், குறிப்புகளும் சுவாரசியமாக நாட்காட்டியில் தொகுக்கப்பட்டு உள்ளன.
பக்கத்துக்கு தலா ஒரு சமையல் குறிப்பும், டிசம்பர் மாதத்துக்கான பக்கத்தில் இரு சமையல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. சர்க்கரைப் பொங்கல், புளிமுளம் (மீன்குழம்பு), கம்மங்கூழ், தோசை, பழைய சோறு, ஒடியல் கூழ், கத்திரிக்காய் பொரியல், உளுந்தஞ் சோறு, முருங்கைக்காய் சாம்பார், தேங்காய்ப்பால் ஆப்பம், நாட்டுக்கோழிக் குழம்பு, வத்தக்குழம்பு, வெந்தயக் குழம்பு ஆகிய உணவுகளை சமைக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது.
அந்தந்த உணவு சார்ந்த ஓவியங்களும், படங்களும் மாதந்திர நாட்காட்டிக்கு அழகூட்டுகின்றன. இந்த நாட்காட்டியை, காலச்சுவடு பதிப்பகம் தயாரித்துள்ளது. ‘‘நாட்காட்டி தொடர்பாக விபரங்களைப் பெற, nagercoil@kalachuvadu.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 96777 78863, 96777 78864 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்,’’ என, காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.