சனாதன தர்மம் எனப்படும் இந்து மத நெறியை, பகவத் கீதை பார்வையில் அழகாக விளக்கும் நூல்.
பக்தி நெறி மூலம் பழகும், இறையின் நாம கீர்த்தனமே உயிருக்கு ஆதாரமான உரமூட்டும் சிந்தனையை வளர்க்கும் என்ற பார்வையில், முரளிதர சுவாமிகள் பகவத் கீதையில் பக்தியோகத்தை தன் சொற்பொழிவுகளில் தெரிவித்த கருத்து, இங்கே அழகிய மாலையாக உருவாகியிருக்கிறது.
பக்தியில் பிரகலாதன் போல அல்லது துருவன் போல எளிதில் மாற முடியாது என்பதை தெளிவாக்கும் சுவாமிகள், தெய்வ நிந்தனை செய்யக்கூடாது என்கிறார்.
பகவானை வழிபடுவோர், ‘‘உன்னை நம்பினேனே! என்னை இப்படிக் கைவிட்டு விட்டாயே! நீ தான் கல் என்றால், உன் மனதும் கல்லா!’’ என்றெல்லாம் கேட்கக்கூடாது என்பது இன்றைய பக்தர்கள் பலர் உணர வேண்டிய தகவல் (பக்.77).
அதே போல, குருவின் வார்த்தைகளை ஏற்காமல் நிந்திப்பதும் தவறாகும் என்று அழுத்தமாக கூறியுள்ளார். மாயை என்பதை விளக்கும் போது, ரூபாய் நோட்டைப் பார்க்கும் போது, காகிதம் என்பதை விட பணம் என்ற எண்ணமே மேலோங்கும். ஆனால், இறைவன் திருஉருவைப் பார்க்கும் போது மரமா அல்லது கல்லா என்ற எண்ணம் ஏற்படுவதையும் ஒப்பிட்டு, இது, பணத்தாசையால் ஏற்படும் போக்கு என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.பக்தர்கள் பயன் பெறும் நல்ல நூல்.