இயற்கை, மனிதனுக்கு அளித்த நன்கொடை, மரங்கள். ஆகாயம் நோக்கிய வெற்றுப் பூமிக்கு, ஆதாரமாக இருக்கும் மரங்களால் தான் காடுகள் உருவாகின்றன. அக் காடுகளால் தான் மழைப் பொழிவு ஏற்பட்டு, உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ முடிகிறது.
இவ்வாறு, உயிர்களின் வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் தேவதூதர்களான மரங்களை, மனிதர்கள் தங்கள் அற்ப ஆசைகளுக்காக அழித்ததன் விளைவு, இன்று, பல அரிய வகை மூலிகை மரங்கள் அழியும் நிலையில் உள்ளன.
புங்கை, பூவரசம், கோங்கு, கடுக்காய், கல்யாண முருங்கை, பொந்தன் என, நம் முன்னோர் வாழ்வோடு இணைந்திருந்த மரங்கள் இன்று, நமக்கு செவிவழி செய்தியாகி, கற்பனையில் அதன் வடிவத்தை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு, அவை, நம்மை விட்டு வெகு தூரம் விலகி போய் விட்டதுடன், இவ்வுலகில், தம் ஆயுளை முடித்துக் கொள்ளும் நிலையில் உள்ளதை, ‘அழியும் மரங்கள்’ என்ற புத்தகத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார், நூலாசிரியர், சுப்ரபாரதிமணியன்.
ஈரல் நோய்க்கு நிவாரணம் அளிக்கும் சரக்கொன்றை; பித்த நோய்களை குணப்படுத்தும் கடுக்காய்; பித்தத்தை சமநிலைப்படுத்தும் இலந்தை; கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் அத்தி என, மரங்களின் மருத்துவ பயன்பாடுகளையும், புராணம் மற்றும் தமிழ் இலக்கியங்களில் அவற்றுக்குள்ள தொடர்பு குறித்தும், எளிய நடையில், சுவாரசியமாக விளக்கியுள்ளது வெகு சிறப்பு!
இயற்கை ஆர்வலர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது!
– ப.லட்சுமி