இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் புத்த தத்துவங்கள் வழி காட்டியுள்ளன. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ற ஜென் தத்துவக் கதைகள், கைபேசி ‘சிப்’ அளவு சிறிதாக இருந்தாலும், கதையின் வீச்சு மனதைப் பெரிதா ஆக்கிரமித்துக் கொள்கிறது.
ஒவ்வொரு கதையும் தர்க்க வாதங்களுடன் தொடங்குகிறது. தன்னைத் தான் ஆராய்கிறது. திருப்பமாக ஒரு தீர்ப்பைத் தருகிறது இந்தக் கதைகளில்.
மொத்தமுள்ள, 21 தலைப்புகளில் விறுவிறுப்பான, வேறுபாடு கொண்ட தலைப்புகளில் ‘ஜென்’ கதைகள் இந்த நூலில் விருந்தாக பரிமாறப்பட்டுள்ளன. சித்தர்களின் தத்துவப் பாடல்களைக் கொண்டு, ஒவ்வொரு கதையும் தீர்மானம் வாசிக்கின்றன.
‘மனதில் உள்ள ஆசை, அகங்காரம், பொறாமையை களைந்த நிர்வாணத்தில் மனமும் மறைந்த இடத்தில் தான் ‘ஜென்’ இருக்கிறது’ என்று கூறியுள்ள விளக்கம், விளக்கு ஒளியாக வழிகாட்டுகிறது.
ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை செய்து, மீண்டும் போருக்கு அனுப்பும் மருத்துவரின் வருத்தமும், அங்கு வீரர் வீர மரணம் அடையும் சோகமும் ஜென் குருவால் மாறுகிறது.
முடிவில் சிந்தனைக்கு என்ற தலைப்பில், நம்மூர் பட்டினத்தாரின் நிலையாமை பாடல்களைத் தந்திருப்பது முத்தாய்ப்பாக ஜொலிக்கிறது. மரணம் பற்றிய சென்சாய் சிந்தனை புதிய விளக்கமாக உள்ளது.
புத்தர் மரச்சிலைகளை எரித்த முதியவர் கதையின் முடிவில், ‘ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் இருப்பது தர்க்கத்தில். ஆணில் பெண்ணும், பெண்ணின் ஆணும் காண்பது யதார்த்தத்தில்’ (பக்.37) என்ற தத்துவம் மனதில் பதிவாகிறது.
புத்தர் ஏற்றி வைத்த ஜோதியைத் தான் ‘ஜென்’னில் வாழ்கிறவர்கள் காலந்தோறும் ஏந்தி வருகின்றனர்.
மனதை லேசாக்கவும், மேடைப் பேச்சை சுவையாக்கவும், இந்த ‘ஜென்’ கதைகள் உதவியாக நிற்கும்.
– முனைவர் மா.கி.ரமணன்