திருக்குறளை முன்வைக்கும் புதிய பார்வை. புதிய திறனாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இந்நூல், திருக்குறளை மைய இழையாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. பின் நவீனத்துவ வாசிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கட்டுரைகள் பல, உழுதசால் உழுவதையே வழக்கமாகக் கொண்டிருக்க, இந்நூல் அதிலிருந்து விலகி, வேறுபட்டு, புதிய கண்ணோட்டத்தில் பயணித்துள்ளது. நூலின் தலைப்பே கூட ஒரு புதிய அணுகுமுறைதான்.
ஒன்பது தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகளில், ‘அயன்மை என்னும் பரத்தமை’, ‘அறனெனப்படுவது அரணேயாம்’, ‘கோன்மையின் பண்பாவது பரியாயம்’, ‘வாய்மை படிற்றொழுக்கம் வஞ்சகமனம்’ முதலியவை திருக்குறள் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. பின் நவீனத்துவத்தின் கருத்தாளர்களான மிசேல் பூக்கோ, நீட்ஷே போன்றோரின் சிந்தனைகளைக் கட்டுரையினுாடே தந்து தம் எண்ணங்களுக்கு வலிமை சேர்த்துள்ளார் ஆசிரியர்.
பரத்தமை என்பதைச் சங்க காலம் சமூகத் தீமையாகக் கருதவில்லை என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், சங்க காலத்திற்குப் பின் சமுதாய வளர்ச்சியில் பரத்தையர் குறித்த மதிப்பீடுகள் மாற்றம் பெற்றிருந்தன என்ற தம் கருத்து முடிவை முன்வைத்துள்ளார்.
சொத்துடைமைச் சமூகத்திற்குத் தகாதவளாகப் பரத்தை காணப்பட்டாள் என்ற கருத்தை நிறுவுகிறார். அறம் காலந்தோறும் மாறக்கூடியது என்ற கருத்தை பூக்கோவின் சிந்தனைகளோடு எடுத்துக்காட்டும் ஆசிரியர், ‘அறமொழியில் உருவான திருக்குறள் இலக்கியத்தின் சாயலைப் பெற்றிருந்த போதிலும் சமத்காரமாக மொழியாடலைச் செய்யும் சாமர்த்தியம் மிக்கதாக இருப்பதைக் காணமுடியும்’ என்று நிறுவ முயன்றுள்ளார்.
வள்ளுவர் கூறும் செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற அதிகாரங்களை, ஆளும் வர்க்கத்தின் ஒழுங்குமுறை அல்லது கட்டுப்படுத்துதல் என்ற நோக்கில் இரண்டாவது கட்டுரையை அணுகி உள்ளார்.
‘கொள்ளற்க வில்லேர் உழவர் பகை’ என்ற கட்டுரை, திருவள்ளுவர் காட்டும் மன்னரைச் சேர்ந்தொழுகல், அவையறிதல் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அரசனோடு நட்பும், நட்பின்மையுமான கருத்தாக்கங்கள் கொண்டது இக்கட்டுரை.
நன்மை, தீமை என்ற இருமைகளை எதிர்வினையாடலாகக் கொண்டு அதை அறமதிப்புடையனவாகவும், அறமதிப்பற்றனவாகவும் விரித்துரைப்பதை இக்கட்டுரையில் காணலாம். வாய்மை என்ற வள்ளுவரின் கருத்தாக்கத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி ஆராய்கிறது, ‘வாய்மை படிற்றொழுக்கம் வஞ்சகமனம்’ என்ற கட்டுரை.
திருக்குறளின் காமத்துப்பால், 28 அதிகாரத்தின், 280 பாடல்களும் என்று பக். 123ல் எழுதியிருப்பதை அடுத்து, வரும் பதிப்பில், 25 அதிகாரம், 250 பாடல்கள் என்று திருத்திக் கொள்ள வேண்டும். அதே போல, ஒற்றுப் பிழைகள் மிகுதியும் உள்ளதையும் ஆசிரியர் கவனத்தில் கொள்வாராக. புதிய கோணத்தில் வெளிவந்திருக்கும் இந்நூல், அதை புதியதோர் அணுகுமுறையில் வைத்துக் காண்பதற்கும் உதவும்.
– ராம.குருநாதன்