செம்மூதாய்ப் பதிப்பகத்தின், 100வது வெளியீடாக அமைந்துள்ள இந்நூல் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஆகும். இது, சிலம்பு, மேகலை என, இரு நூல்களாக உள்ளன. காப்பியங்கள், தன் கதை போக்கு வழி, பல பண்பாடு மரபுகளை எடுத்துக்காட்டி, மக்கள் வாழ்விற்கு உறுதுணையாக நிற்பன.
அவ்வகையில், தமிழில் சிலப்பதிகாரம் முதற்கொண்டு, பல காப்பியங்கள் தோன்றிஉள்ளன. அக்காப்பியங்களிலுள்ள, பண்பாட்டுக் கூறுகளை எடுத்துரைப்பதாக, ‘சிலம்பு’ என்னும் முதல் நூல் விளங்குகிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, நாககுமார காவியம், ராவண காவியம், கம்ப ராமாயணம், சிந்தாமணி, பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, பெரியபுராணம், அன்னை தெரசா காவியம், (திருத்தொண்டர் காப்பியம்) நீலகேசி, ஐம்பெருங்காப்பியங்கள், குண்டலகேசி.
மற்றும் இயேசு காவி யம், யசோதர காவியம், திருவிளையாடல்புராணம், வளையாபதி, ராமானுஜ காவியம், தேம்பாவணி, ஐஞ்சிறுங்காப்பியங்கள், விவிலியம், கந்த புராணம் போன்ற, பல காப்பிய நூல்கள் ஆராயப்பட்டு, படைக்கப்பட்ட கட்டுரைகள் இந்நூலுள் உள்ளன.
இவை தவிர, சங்க இலக்கியம், இலங்கை மட்டக்களப்பு மக்கள், சித்த மருத்துவமும், யோகாசனமும், திருவாசகம், பிரமம், திருமங்கை ஆழ்வார், வாலியின் திரை இசைப்பாடல்கள் என, பல பொருள் குறித்த ஆய்வுகளும் சிறுபான்மையாக, இந்நூலில் அமைந்து உள்ளன.
பல்வேறு காப்பியங்களை, ஒரே நேரத்தில் அறியும் வாய்ப்பானது, இந்நூல் வழி மக்களுக்கு கிட்டும்.
பல்வேறு ஆய்வாளர்களின் தனிப்பட்ட திறமைகள், ஒன்றாக குவிந்துள்ள நூலாகவும் இது திகழ்கிறது. தமிழர்கள் மிக பழங்காலத்திலேயே, எண்கணித அறிவைப் பெற்று விளங்கினர் என்பதை, ‘சிலம்பில் எண்கணிதம்’ என்னும் கட்டுரை விளக்குகிறது.
வயது முதிர்ச்சி, நீரின் அடர்த்தி, உணவுப் பொருள் பதப்படுத்துதல், நீர்த்தேக்கம், விதைநேர்த்தி, விளைநிலம் – சீரமைப்பு, மரக்கலம், தீக்கடைக்கோல் இவை குறித்த அறிவியல் செய்திகளை வளையாபதியில் காண இயலும். இதை, அறிவியல் செய்திகள் எனும் கட்டுரை விளக்குகிறது.
தமிழனை, உலகத்தில் சிறந்தவனாக அடையாளப்படுத்திக் காட்டுவது, அவன் போற்றிய பரந்த பண்பாட்டுக் கூறுகளே ஆகும்.
காலங்கள் மாற மாற, காலச்சுழலுக்கேற்ப மனிதனை பக்குவபடுத்தியவையும், அவன் பின்பற்றி வந்த ஒழுக்க முறைகளேயாகும்.
இலக்கியங்கள் பல அவனையும், அவன் பின்பற்றி வந்த ஒழுக்கப் பண்பாடுகளையும் பிரதி பலிக்கும் மிகச் சிறந்த கருவியாக, காப்பியங்கள் விளங்கி வருகின்றன.
காப்பியங்களில் ஈடுபாடு உடையோர் யாவர்க்கும் இந்நூல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
–முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்