‘உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘உணவே மருந்து’ என்று வாழ்ந்த நம் முன்னோர்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகை சாறுகள் என இயற்கை அள்ளிக் கொடுத்த, அமிர்தத்தை உண்டு, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, உடல் மற்றும் மன வலிமையுடன் ஆரோக்கியமாக இருந்தனர். இன்றோ, பாக்கெட்டில் அடைக்கப்பட்டவற்றையும், துரித உணவுகளையும் உண்டு, நோய்களின் பிறப்பிடமாகவே மாறி வருகிறது, மனித சமுதாயம்.
உடலின் இயல்புத் தன்மை மாறும் போது நோய் ஏற்படுகிறது. அவை, இயல்பு நிலைக்கு திரும்ப, இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் தான், பழங்கள், பச்சிலை சாறுகள் என்பதை இந்நூலில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார், நூலாசிரியர்.
எந்தெந்த பழங்களில், என்னென்ன சத்துக்கள் உள்ளன; அவை, எந்தெந்த நோயை குணப்படுத்துகின்றன; அவற்றை, எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து, உயிர்களை காக்கும் அமிர்த சஞ்சீவினியான மூலிகைகளை பட்டியலிட்டு, அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் உட்கொள்ளும் முறை குறித்து, விளக்கமான தகவல்கள் நிரம்பியுள்ளது.
– ப.லட்சுமி