கம்பராமாயணம் ஓர் ஆழ்கடல்; அதில் முழுகி, முத்தெடுத்த அறிஞர்கள் பலர். இந்நூலாசிரியர், கம்பனுக்கு அனேக சட்டைகள் உண்டு என்றும், அவற்றை நாம் தான் கழற்ற வேண்டும் என்று கூறி, கம்பனை அரைத்து, கரைத்து, அலசி, வடிகட்டி சாராம்சத்தைத் தந்திருப்பதாகக் கூறுகிறார். நூல் படித்து முடித்ததும், அவர் கூற்று உண்மை தான் என்று உணர்கிறோம்.
இந்நூலில், எட்டு கம்பராமாயணப் பாடல்களை ஆசிரியர் விளக்கியுள்ள திறம் மிக அருமை. ‘ஆற்றார் ஆகின்’ என்று துவங்கும் பாடலில், சீதை என்னும் தாமரையிடம், நிலவு தோற்று-விட்டது என்றும் (பக். 27), ‘மருங்கு இலா நங்கையும்’ என்ற பாடலில், ஒன்றும் ஒன்றும் இங்கே கூடினால் இரண்டு இல்லை; ஒன்று தான் என்பதை மிக அழகாக விவரிப்பதும் (பக். 42), ‘பிள்ளைபோல் பேச்சினாளை’ என்ற பாடலில், சூர்ப்பனகையின் கூற்று இப்பாடலில் அமங்கலமாகவே ஆகிறது என்று விளக்குவதும் (பக். 53), ‘இந்திர நீலம் ஒத்து’ என்ற பாடலில் ராமனின் முடியழகு, முகத்தழகு, கையழகு, தோள் அழகு ஆகியவற்றை விளக்குவதும் சிறப்பாகும். உரையாடல் வாயிலாக விளக்கும் நூலாசிரியரின் உத்தி பாராட்டத்தக்கதாகும்.
–
டாக்டர் கலியன் சம்பத்து