சமண சமயத்தினர் தமிழுக்களித்த நூற்கொடைகள் பல. காப்பியங்கள், இலக்கணங்கள், உரைகள், இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகிய வகைமைகளில் சமணப் புலவர்களின் படைப்புகள் பலவாகும். சிற்றிலக்கிய வகையிலும் சமணப் புலவர்களின் பங்களிப்பும் பெரிதே என இந்நூல் மெய்ப்பிக்கிறது.
சமண சமயத் திங்களிதழ் ஒன்றில் இவ்வாசிரியர் எழுதிய, 120 கட்டுரைகளில் முதல், 60 கட்டுரைகள், ‘ஜைன நூல்களை அறிவோம்’ என்னும் தலைப்பில் முன்னதாக வெளிவந்துள்ளது. எஞ்சிய, 60 கட்டுரைகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளும் விலங்கினமும், குறளும் நாலடியாகும். நம் பழந்தமிழ் நூல்கள் முதலிய தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் பொதுவானவை.
கல்யாண வாழ்த்து என்னும் கட்டுரை, சமண சமயத்தவரின் திருமண முறை பற்றிய சிறப்புகளைக் கூறும் நூலொன்றைப் பற்றியது.
சுவையான செய்திகள் அடங்கிய கட்டுரைகளுள் அதுவுமொன்று.
அக்கட்டுரையின் வாயிலாகச் சிந்தாமணிமாலை, அப்பாண்டை நாதர் உலா, மேருமந்திரமாலை, அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத் தமிழ், சோபனமாலை ஆகிய நூல்களும் உண்டு என அறிகிறோம்.
சீவகசிந்தாமணியை ஒட்டிய காலத்தில் அமர சிம்மனால் வடமொழியில் செய்யப்பட்ட நூல் அமரகோசம். அந்நூலே சொற்களை அகர நிரல் வழியாகத் தரும் முதல் நூல் ஆத்தி சூடியால் அகரநிலை வந்ததெனலாம். எந்த ஒரு நூலைப் பற்றி எழுதும்போதும், அந்த நூல் தமிழிலேயே எழுதப் பெற்றதா என்பதையும், சம்ஸ்கிருதம் பிராகிருத மூலமாயின் அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்பதையும் பிறமொழிகளிலும் அந்நூல் மொழிபெயர்க்கப் பெற்றிருந்தால், அவ்விபரத்தையும், நூலின் திரண்ட கருத்தையும், நூல் தோன்றிய காலத்தையும் இந்நூலசிரியர் குறிப்பிடுகிறார்.
இவற்றால் இக்கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு இவர் மேற்கொண்ட உழைப்பின் அழுத்தத்தை உணரலாம்.
இதழில் இவர் வெளியிட்ட நிரலிலேயே கட்டுரைகள் உள்ளன. தமிழிலேயே தோன்றியவை.
மொழிபெயர்ப்பு முறையில் தமிழுக்கு வந்தவை, பொதுவானவை என வகை செய்து நூலை வெளியிட்டிருந்தால், கற்பவரை மேலும் கவர்ந்திருக்கும். சில பல இடங்களில் பாடல்களையும் உரைநடை போல அச்சிட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ளாத பல நூல்களை நன்கு அறிமுகம் செய்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். சமண சமயச் செய்திகளை எளிமையாக நூலாசிரியர் புலப்படுத்தியுள்ளார்.
– ம.வே.பசுபதி