பொதுவுடைமைப் பார்வையில் தமிழ் இலக்கியத்தை நோக்கும் பன்முகத் திறன் கொண்ட நூல். சமுதாய நெறிகளில் கம்பன் காவியத்தை காண்பதும், வள்ளுவரை மார்க்சிய மார்க்கத்தில் பார்ப்பதும், தொழில்கள் பற்றிய சிற்றிலக்கிய நோக்கும் முதன்மைக் கட்டுரைகளாய் அமைந்துள்ளன. ‘மணிக்கொடி, சரசுவதி’ இதழ்களில் உலா வந்த இலக்கியச் சிறுகதைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.ரகுநாதன், கரிச்சான் குஞ்சு, தி.க.சி., கு.சின்னப் பாரதி போன்ற இலக்கியச் சிற்பிகளின் ஆளுமையை அவர்களது படைப்புகளோடு ஒப்பிட்டு திறனாய்வு செய்துள்ள விதம் நன்றாக உள்ளது.
மனித குலத்தை இழிவுபடுத்தும் சிறுநெறி ஆகிய ஜாதி முறையை இகழ்ந்து பேசுவதில், கம்பன் ஜாதியற்ற சமுதாயத்தை நிலை நிறுத்தும் அறநிலையை உணர முடிகிறது.
நீதியால் வந்தது ஒரு நெடும் தருமநெறி அல்லால், ஜாதியால் வந்த சிறுகதை அறியான் என் தம்பி என்று கும்பகர்ணன், வீடணனின் பெருமையை ராமனிடம் கூறுகிறான்.
முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, மதுரைக்கலம்பகம் ஆகிய சிற்றிலக்கியங்கள் காட்டும் பாட்டாளி மக்களின் பண்பு நிறை வாழ்வை, இருட்டில் கிடக்கும் ஏழை மக்களின் கலையுணர்வை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.
தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக, 77 நாள் உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் வரலாறு சிறப்பாக தரப்பட்டுள்ளது. சகல வித்தைகளையும் கற்று தேர்ந்து சுடர் அறிவுடன் விளங்கிய கரிச்சான் குஞ்சுவை பற்றிய மதிப்புரை, எழுத்து மகுடம் சூட்டுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்