‘எச் 2 ஓ’ - இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு கடற்கரை சாலை காற்று...’ என, ஆரம்பிக்கிறது நாவல். மிக நேர்த்தியான எழுத்து நடையால், சினிமா பார்ப்பது போல் கதைக்களம் காட்சிகளாய் விரிகிறது.
சென்னையில் வேலை பார்க்கும் மிடில் கிளாஸ் இளைஞனுக்கும், ஹை கிளாஸ் அப்பார்டமென்ட்டில் வாழும், ஒரு பேரழகிக்கும் இடையேயான சுவாரசிய சம்பவங்கள் தான் கதை.
நாவலுக்குள் பயணிக்கையில் மிக எளிதாக அந்த இளைஞனாகவே ஆக முடிகிற வகையிலான பாத்திர வடிவமைப்பு. நாம் விரும்பும்
அத்தனை கோலிவுட் ஹீரோயின்களையும் ஞாபகப்படுத்தி விட்டு போகும், அந்த பேரழகி.
அவனுக்கும் அவளுக்குமான, மிக யதார்த்தமான அந்த முதல் சந்திப்பில் நம் முதுகில் லேசாய் இறக்கை முளைப்பதை உணர முடிகிறது. இருவருக்குமான இணைப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏறிக்கொண்டே போகிற, ‘ஹார்ட் பீட்,’ நாவலின் கடைசி பக்கம் வரை இறங்காமல் இருப்பது ‘கிக்’ கடைசியாக, ‘எச் 2 ஓ’ தரும் எச்சரிக்கை நச்!