இந்த நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகளை எளிய தமிழில் தெளிவாக விளக்கும் நூல்.
சாதாரண மக்களின் மருத்துவ சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் எளிய தமிழில் எழுதி, எண்ணற்ற வாசகர் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன்.
தினமலர், ‘என் பார்வை’ பகுதியில் இவரது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
இதுவரை, 38 மருத்துவ புத்தகங்கள் எழுதி உள்ளார். அவற்றில் இருந்து எல்லாம் இந்த புத்தகம் வித்தியாசமானது.
மெய்யான மருத்துவ அற்புதங்களை, ‘மருத்துவ மாயங்கள்’ என்ற தலைப்பில் ஆச்சரியம் தரும், 91 கட்டுரைகளாக தந்துள்ளார்.
மேலை நாடுகளில் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டுள்ள, நாம் அறிந்திராத பல்வேறு சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சைகள், மருத்துவக் கருவிகளை எல்லாம் தேடி இந்நூலில் தொகுத்திருக்கிறார்.
செயற்கை ரத்தம், செயற்கை இதயம், பயோனிக் கணையம், பயோனிக் கால்கள், ஒயர் இல்லாத பேஸ்மேக்கர், நுண்துளையில் பைபாஸ் அறுவை சிகிச்சை, கருப்பை மாற்று அறுவை சிகிச்சை என மருத்துவ அதிசயங்களை, புரியும் சொற்களால் எழுதி கவர்கிறார் டாக்டர் கு.கணேசன்.
நோயாளிகள் மட்டும் படிக்க வேண்டிய புத்தகம் அல்ல; அவர்களுக்கு உதவுபவர்கள், நவீன மருத்துவ உலகம் பற்றி விழிப்புணர்வு பெற விரும்புபவர்கள், மருத்துவ மாணவர்கள் படிக்கலாம். முக்கியமாக டாக்டர்களுக்கு உதவும் நூல் இது.
– ஜி.வி.ஆர்.,