பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும்.
‘நீங்கள் என்னை ஒரு உடம்பாகப் பார்க்கிறீர்கள். நான் ஒரே நேரத்தில், 20 லோகங்களில், 20 சரீரத்தில் வசிக்கிறேன்’ என்று சொன்ன ரமணர் ஒரு அதிசய புருஷர்.
பகவான் அதிசயங்களைப் பெரும்பாலும் தவிர்த்ததுடன் தன் சீடர்களும் அவற்றைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். பல அதிசயங்கள் அவர் முன்னர் அரங்கேறின. அவற்றை ‘அருணாச்சலேஸ்வரர் கருணை’ என்று பகவான் சாதித்தார்.
பத்து பேருக்கான உணவு, ஒரு நாள் எதிர்பாராமல் வந்து குவிந்த, 30 பேருக்குப் போதுமானதாக இருந்தது. இரண்டு ரொட்டித் துண்டுகளையும் இரண்டு மீன்களையும் வைத்து, ஏசுபிரான் ஒரு பெரிய கூட்டத்தின் பசியைப் போக்கியதை இது நினைவுறுத்தியது.
அவருக்கே ஒரு முறை வயிறு சரி இல்லாதபோது கடுக்காய் கேட்டாய். அன்பர்கள் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு கிராமவாசி கடுக்காய் மூட்டை ஒன்றை இறக்கி வைத்து விட்டு பகவானை வணங்கி விட்டுப் போனார்!
எச்சம்மாள் என்ற சிஷ்யை கணவன், குழந்தைகளை இழந்து பகவானை சரண் அடைந்திருந்தார்.
தன் சிஷ்யையின் பேரன் ரமணன் என்ற சிறுவன், அருணை, அய்யங்குளத்தில் மூழ்க இருந்தபோது, ஒரு கிழ பிராமணர் உருவில் குளத்தில் இறங்கி, பகவான் அவனைக் காப்பாற்றிக் கரையில் போட்டு விட்டுப் போனார்.
மறு நாள் அவனைத் தரிசன ஹாலில் பார்த்த பகவான், ஒன்றும் தெரியாதவர் போல ‘என்ன ரமணன், ஐயன் குளம் ரொம்ப ஆழமா இருந்ததா?’ என்று கேட்டார்.
மற்றவர்கள் இவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசும் போதெல்லாம், பகவான், ‘எல்லாம் அருணாச்சலேஸ்வரரின் மகிமை’ என்று மட்டுமே கூறுவார்.
கிறிஸ்துவ மிஷனரிகளைச் சேர்ந்த சிலர் பகவானிடம் இப்படிக் கேட்டனர்.
‘நாங்கள் மனிதக் குலத்திற்கு சேவை செய்கிறோம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் நிறுவி உதவுகிறோம். ஆனால், உங்களைப் போன்றோர் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களே, ஏன்?’ என்று வினவினர்.
பகவான் சொன்னது: ‘சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை நிர்மாணிக்கிறானா? ஆனால், சூரியன் இருப்பதால் தானே இவை எல்லாம் நடைபெறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்...‘ என்றார் ரமணர்.
‘பகவானே, உங்கள் கூட இருப்போரில் சிலரே, சில சமயம் வினோதமாக உங்கள் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொள்கின்றனரே, நீங்கள் அவர்களைத் தடுக்க மாட்டீர்களா?’
‘நம்மைச் சரி செய்வது உலகைச் சரி செய்வது ஆகும். சூரியனின் வேலை ஜொலிப்பது மட்டுமே. யாரையும் திருத்துவது இல்லை. அது ஜொலிக்கும் வேலையை ஒழுங்காகச் செய்தால், உலகே வெளிச்சத்தால் நிரம்பும். நம்மை நாமே திருத்துவது, உலகிற்கே வெளிச்சம் கொடுப்பது மாதிரி!’ என்று பகவான் பதில் சொன்னார்.
படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் இந்தப் புத்தகம் ஒரு ஆன்மிக இலக்கியப் பொக்கிஷம்!
– எஸ்.குரு