கடந்த, 2005ல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பின், முந்தைய சில கதைகளோடு சில புதிய கதைகளும் சேர்க்கப்பட்டு இந்த ஜி.சரவணனின் இரண்டாவது தொகுப்பு வெளிவந்திருக்கிறது!
நகர்மயமாக்கலால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைந்தது என்று மறுக்க முடியாது. ஆனால், மனித மனங்களுக்குள் இருந்த ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை என்ற மாண்பு கேடடைந்து விட்டது!
கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழமையான காரியங்கள் ஒவ்வொன்றாய் நவீனமாயின. நவீன மயமாவது நல்லது தான்.
ஆனால், முற்றிலும் இயந்திரத்தனம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், பழமையின் எச்சங்களை எங்காவது ஓரிடத்தில் பதிவு செய்திட வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதப்பட்ட கதைகள்!
‘பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்’ என்று ஒரு கதை!
‘நான் இருக்கும் ஊரில் எந்த வீட்டிலும் கோலம் போடுவோர் இல்லை. ஒரு சில வீடுகளில் பெயருக்கென்று சின்னதாய் கோலம் போடுகின்றனர். சில பேர் பிளாஸ்டிக் காகிதத்தைத் தரையில் ஒட்டி வைத்திருக்கின்றனர்.
பெரும்பாலான வாசல்களில் வண்ணக் கோலமில்லை. பெண் பிள்ளைகள் நிற்கவில்லை. அனாதையாய் கிடக்கும் தெருக்களில் வாசல்களும் அப்படியே விக்கித்திருக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருக்கத்தில் கோல மாவு விற்போர் வேற்றுாருக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
இந்த ஊரில் கோலம் போட யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்பர். பல வீடுகளில் கோல மாவு பற்றிய அறிதலே இல்லை! காலை நேரப் பனியில் கோலம் போடுவது உடம்புக்கு ஆகாது என்று அச்சமுறுவர்.
எங்கு அலைந்தும் அழகிய கோலம் போட்ட வீடும், தெருவும் அகப்படுவதே இல்லை என்று கதை ஆசிரியர் பதிவு செய்வார்...
காலத்தைக் காட்டும் கண்ணாடியாக உள்ளது இந்த சிறுகதைத் தொகுதி.
– எஸ்.குரு