மு.வ.,வின் செல்லப்பிள்ளை எனத்தகும் இரா.மோகன் எழுதியுள்ள இவ்வாய்வு நுால், புறநானுாற்றைப் பல்வேறு கோணங்களில் காட்டியுள்ளது. ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நுாலில், 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
சங்கச் சான்றோர்களின் ஆளுமைப் பண்புகள், புறநானுாற்றில் புதுமை, நீராதாரத்தின் அருமை, பண்டைத்தமிழர் மெய்யியல் திறம் எனப் பல்வேறு திசைகளில் ஆய்வு பரந்து விரிந்து செல்கிறது.
மாசாத்தியார் காட்டும் மறக்குடி மங்கையர் மாண்பு, சான்றாண்மைக்கு ஆழி பெருஞ்சித்திரனார், உலகின் ஒப்பற்ற கவிஞர் அவ்வையார், புறநானுாற்றில் நிலையாமைத் தத்துவம், புறநானுாற்றில் உவமை நலங்கள், நெஞ்சையள்ளும் உயர்தனி இலக்கியம் புறநானுாறு என்னும் முத்தாய்ப்புடன் நுாலை முடித்துள்ளார் ஆசிரியர்.
ஆளுமை வளர்ச்சியாவது, பண்பு நலன், நடத்தை, மனப்பாங்கு எனும் மூன்றின் அடிப்படையில் அமைவது என, இன்றைய நவீன கால ஆய்வுகள் சொல்லுவனவற்றை, புறநானுாறு அன்றே விளக்கிச் சொல்லியுள்ளது.
ஒரே உலகக் கொள்கை, அனைவரும் நிகர், புலவரைப் போற்றி மதித்தல் நல்லாட்சிக்கு அழகு, வாணிகப் பரிசில்கள் அல்லன் எனும் செம்மாப்பு, வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன், பெரிதே உலகம் பேணுனர் பலரே போன்ற அரிய செய்திகளை விளக்கும் அழகு நன்று.
பல புறநானுாற்று பாடல்களை பல மேடைகளில், பல ஏடுகளில் கேட்டும் படித்தும் மகிழ்ந்தவையாயினும், ஆய்வு நோக்கில் அவற்றின் சிறப்பைக் கூர்ந்து நோக்கித் தகவல் பலவற்றைத் தந்துள்ளது சிறப்பாகும். புறநானுாறைப் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் துாண்டுவதாக அமைந்துள்ளது.
– கவிக்கோ ஞானச்செல்வன்