குறைந்த விலை உள்ள இந்த நுால் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது! நுாலாசிரியர் ராதாகிருஷ்ணன், 55 ஆண்டுகளுக்கும் மேல் நாடகப் பணி புரிந்தவர்! 25க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்து, நடித்து இயக்கியவர்!
தமிழ் நாடக மேடையின் தோற்றம் முதல் இன்று நாடகம் நடத்தும் குழுக்கள் வரை இந்நுாலில் எழுதியுள்ளார். தொழிற்துறை நாடக சபை துவங்கி, அமெச்சூர் நாடகக் குழுக்கள் வரை அனைத்து நாடக சபை விபரங்களையும் மிக அழகாகத் தொகுத்திருக்கிறார்!
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, பல நாடகக் கலைஞர்கள், தங்கள் கலையால் மக்களிடையே, சுதந்திர உணர்ச்சியை ஊட்டினர். நாடு சுதந்திரம் அடைந்த பின் பல நாடகக் குழுக்கள் தோன்றின. குறிப்பாக, 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியை நாடகங்களின் பொற்காலம் எனலாம்.
சங்கர தாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், சி.கன்னையா, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எம்.கந்தசாமி முதலியார், பாலாமணி அம்மாள், டி.கே.எஸ்., சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாமம், கலைவாணர் என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி, வி.கே.ராமசாமி, சிவாஜி உட்பட பலர் குறித்த குறிப்புகள் அருமை!
மீண்டும் நாடகங்கள் தழைக்க, ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார், ஆசிரியர் கருத்து சிந்திக்கத்தக்கது.
– எஸ்.குரு