தொன்மையும், மேன்மையும் கொண்ட பழந்தமிழ் இலக்கியங்கள் அறத்தின் அழகுணர்வு வெளிப்பாடுகள். இத்தகு தமிழ்ப் பண்பாட்டு அறங்களுடன், சமண, பவுத்த அறங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது இந்த நுால்.
அறவுணர்வை முன்னெடுத்து செல்லும் சமண, பவுத்த தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் பதினென்கீழ்க்கணக்கில் உள்ளதை ஆசிரியர் காட்டுகிறார். அழகுணர்வை மையப்படுத்தும் தமிழிலக்கியத்திலிருந்து அவை மாறுபட்டிருப்பதை, பல இடங்களில் ஒப்பிட்டு உணர்த்தியுள்ளார்.
இல்லற நெறியில், அகம் புறமாய் நிற்கும் தமிழ் இலக்கியங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. பவுத்தம், சமணம், வைதீகம் சார்ந்த அறக்கருத்துக்களை, வரலாற்று நோக்கிலும், ஒப்பியல் நோக்கிலும், சமய நோக்கிலும் தமிழ் இலக்கியங்களை இணையாக வைத்து ஆய்வு செய்துள்ளார்.
சமூக வரலாற்று மெய்யியல் பின்னணி, அறிவியல், பவுத்த அறிவியல், சமண அறிவியல், தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பாய்வுகள், பொது இயல்புகள் என, ஏழு தலைப்புகளில் இந்த பட்ட ஆய்வு நுால் விரிவாக்கம் செல்கிறது.
–முனைவர் மா.கி.ரமணன்