வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம்.
இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள ஹர்ஷப் பேரரசனை, நர்மதை நதிக்கரையில் தோல்வி பெறச் செய்தான். பின், மகேந்திர பல்லவன் மேல் போர் தொடுத்தான். கதம்ப நாட்டு மன்னன் புலிகேசியுடன் சேர்ந்தான். இருவரும் சேர்ந்து, பல்லவன் மேல் பாய்ந்து போரிட்டனர். புள்ளலுாரில் கடுமையாகப் போர் நிகழ்ந்தது. பல்லவன் வெற்றிக்கொடி நாட்டினான்.
‘காஞ்சியின் காளி கோவில்’ என்ற முதல் தலைப்பில் துவங்கி, 72ம் தலைப்பான, ‘வெற்றியும் பரிசும்’ வரை, சரித்திர நாவல் குதிரை பயணமாக குதித்து ஓடுகிறது. காஞ்சியின் கடைவீதிகளை, பல்லவர் காலத்தின் வணிக முறைகளை விரிவாகப் பேசுகிறார்.
பல்லவ காஞ்சி, புத்த காஞ்சி, சமண காஞ்சி, சைவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று கல்வியில் சிறந்த காஞ்சியை வருணனை செய்கிறார். புதினத்தில் பல வரலாற்று உண்மைகள் புள்ளிகளாகத் தெரிகின்றன. புராணச் செய்திகளும் கிள்ளி வைக்கப்பட்டுள்ளன.
மாலினிதேவியிடம், ஆதித்தன் துர்வாசரிடம் சாபம் பெற்ற துவார பாலகர்கள் முடிவைப் பற்றிக் கூறும் இடம், தங்க நகையில் வைரம் பதித்தது போல் ஒளி வீசுகிறது. திருமாலை வழிபட்டு பல பிறவிகள் எடுப்பதை விட, அவரை எதிர்த்து ஏழு பிறவிகளில் அடைந்து விடலாம் என்பதை ஆதித்தன் உதாரணமாக கூறுகிறான். வரலாற்றுப் புதினம் இது. படிப்பவர் மனதை மயிலிறகால் வருடுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்