நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு – நகரத்தார் கோவில் – ஆண்களின் பெருமை – பெண்களின் சிறப்பு – நகரத்தார் வீட்டின் அமைப்பு – நகரத்தார் உறவு முறைகள் – நகரத்தார் திருமண முறைகள் – மருந்து அல்லது தீர்த்தம் குடித்தல் – நகரத்தார் பெயர் சூட்டும் முறைகள் – நகரத்தார் உணவு முறைகள் போன்ற தலைப்புகளில் நகரத்தார் பெண்களின் சிறப்பைப் பேசுகிறார் ஆசிரியை.
நகரத்தார் மரபைச் சேர்ந்த பெண்கள், சம்பிரதாய முறைகளை சீரிய முறையில் தவறாமல் காப்பாற்றி வரும் சிறப்பபை, இந்த நுாலில் வள்ளிக்கண்ணு நன்றாக விவரிக்கிறார். உறவு முறைகளை – ஆச்சி, அப்பச்சி, அப்பத்தாள் – கொழுந்தனார் – சின்னப்பத்தாள், பெரியப்பச்சி – பெரியப்பத்தாள் என்றெல்லாம் நகரத்தார் அழைப்பதை, ஆசிரியை சொல்லிச் செல்கிறார்.
பெண் கருவுற்ற ஐந்தாவது மாதத்தில், அவரவர் வீட்டு வழக்கப்படி மருந்து குடித்தல் அல்லது தீர்த்தம் குடித்தல் என்ற விழா நடைபெறும். நகரத்தார் தாலாட்டுப் பாடல்கள் சில மெய் சிலிர்க்க வைக்கின்றன.
தெள்ளு தமிழ் வளர்த்த தென்னவராம் பாண்டியருக்கும், பிள்ளைக் கவி தீர்த்த பெருமானும் நீ தானோ, மாம்பழத்தைக் கீறி, வயலுக்கு உரம் போட்டுத், தேன் பாய்ந்து நெல் விளையும் செல்வமுளார் புத்திரனோ, வெள்ளித் தேர் பூட்டி – மேகம் போல் மாடு கட்டி, அள்ளிப் படியளக்கும் அதிட்டமுள்ளார் புத்திரனோ!
நகரத்தார் பெருமக்கள், வருவாய் ஈட்டுதலில் வல்லவர்கள், ஈட்டிய பணத்தை பக்தி மார்க்கங்களிலும், விருந்தோம்பலிலும், இல்லம் எழிலுறப் பேணும் கலை உணர்விலும், முறையாகச் செலவு செய்வதும் சிறப்புக்குரியது! சமூக வரலாற்றுப் பொக்கிஷம்!
– எஸ்.குரு