இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியனவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியனவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளக்கங்களையும் தந்து நுாலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டுக்குரியது.
‘இறைவனைக் காண இயலாது; உணர முடியும்’ என, விளக்கியுள்ள பாங்கும், ராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனை கண் குளிர கண்ட நிகழ்வை ஆசிரியர் காட்சிப்படுத்தியுள்ள முறையும் சிறப்புக்குரியது.
நாம் மதம் என்பதை ஆன்மிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்; உண்மையில் மதம் வேறு; ஆன்மிகம் வேறு. மதங்களையெல்லாம் கடந்து வெறும் புள்ளியை அடையும் நிலையில் தான் ஆன்மிகம் தோன்றும்.
தன்னை உடலாகவோ மனமாகவோ கருதாமல், தன்னை ஓர் ஆத்மா என்கிற அளவுக்குப் புரிந்து கொண்டால், அது தான் ஆன்மிகம் எனக் கூறும் சுகிசிவத்தின் கருத்து.
ஆன்மிகத்தைப் பற்றிய புரிதலை உண்டாக்குகிறது. த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்னும் மூன்று தத்துவங்களையும், பாமரனுக்கும் புரியும்படி கூறிய ரமண மகிரிஷியின் விளக்கம் அற்புதமானது.
தெய்வாம்சங்களான, சண்டிகேசுவரர் முதல் ருத்ராட்சம், சங்கு, சாளகிராமம் ஈராக அத்தனையும் ஒட்டுமொத்தமாக விளக்கி, வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளார். பாடல் பெற்ற திருத்தலங்கள், பாடியோர் வரலாறு என, இந்து சமயத்தின் சிறப்புகளை காட்டுகிறது இந்நுால்.
– புலவர் சு.மதியழகன்