கதைகள்... மனித வாழ்வின் அனுபவத்தை பூர்த்தி செய்யும் மாபெரும் ஆயுதம்! கதைகள் இல்லா விட்டால்; கற்பனைகள் இல்லாவிட்டால் மனித வாழ்வு வறட்சி கண்டு விடும்.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகவே கதை கேட்டே வளர்ந்த சிறப்புடையது. தாத்தா – பாட்டி, கூத்து, நாடகம், புத்தகம், சினிமா... என எந்த வழியிலாவது கதைகள் நம்மை வந்தடைந்து கொண்டிருந்தன.
ஆனால் இப்போது... கூத்தும், நாடகமும் காணாமல் போய்விட்டன; புத்தகம் வாங்கிப்படிக்கும், ‘ஜாதி’ என்று வகைப்படுத்தும் நிலையும் வந்து விட்டது; ‘இந்த காலத்துல எங்கப்பா நல்ல சினிமா பார்க்க முடியுது’ என்ற சலிப்புகளும் அதிகரித்து விட்டன; ‘தனிக்குடித்தன நாகரிகம்’ என்று ஒன்று வந்தபின், தாத்தா – பாட்டி பற்றி சொல்லவே வேண்டாம்...
சரி, இந்த மாதிரியான ஒரு நிலையில் தமிழ் சமூகத்திற்கு நல்ல கதைகள் சொல்ல யார் இருக்கின்றனர்? யாராவது இருந்தே ஆக வேண்டுமே...
சாமான்யனுக்கும் சாணக்கியனுக்கும் நல்ல கதை சொல்லும் பெரும் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக் கொண்டது, ‘தினமலர் – வாரமலர்!. தன் லட்சோப லட்சம் வாசகர்களை மடியில் வைத்து தாலாட்டி நல்ல கதைகளை நயமாய் தந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் தமிழ் இல்லங்கள் தோறும் உற்சாகக் காற்றாய் பயணப்பட்டு, எங்களை கொண்டாட்ட மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கிறது.
அன்று முதல் இன்று வரை புதிய எழுத்தாளர்கள் ஏராளமானோரை அறிமுகப்படுத்தி, தமிழ் இலக்கிய உலகை செழிப்புறச் செய்து கொண்டிருக்கிறது.
படித்த பள்ளியை, பழைய நண்பர்களை, வசித்த வாடகை வீடுகளை திரும்பிப் பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு பரவசம் நிகழுமே, அப்படித் தான் இருந்தது இந்தப் புத்தகத்தை கையில் வாங்கிப் படிக்கையில்.
ஏனெனில், விபரம் தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு ஞாயிறன்றும் படித்த வைத்த கதைகளில் சிறந்தவற்றை இப்போது மீண்டும் படிக்கையில் சுகமாக இருக்கிறது.
நினைவிலே ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது; உணர்ந்து பாருங்கள்.
– வெற்றி