சிங்கப்பூர் என்றதுமே நம்மில் பலருக்கும் ஒரு அதிநவீன நகரம் தான் நினைவுக்கு வரும். சிங்கப்பூர் சென்று வந்தவர்களிடம் கேட்டால், அங்கு நிலவும் துாய்மை, நவீன வசதிகள் பற்றி வாய் கிழிய கூறுவர். ஆனால், சிங்கப்பூரின் உண்மையான வரலாறு., அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், சிங்கப்பூரைப் பற்றி அனைவரும் தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில், ஆசிரியர் மாலன் எழுதியுள்ள புத்தகம் சிறப்பாக உள்ளது.
சிங்கப்பூரின் வரலாற்று நிகழ்ச்சிகளை அவர் வர்ணித்துள்ள விதம், மாலன் ஒரு சிறப்பான நாவலாசிரியர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. சிங்கப்பூர் வளர்ச்சிக்கு வித்திட்ட யாருக்கும் அங்கு சிலை இல்லை; அவர்கள் பெயரில் தெரு கூட இல்லை என, அவர் எழுதியுள்ளதை படித்த போது, தமிழகத்தில் முச்சந்திக்கு முச்சந்தி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதை, நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயு பற்றி படிக்கும் போது, சிங்கப்பூர் வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரமிக்க வைக்கின்றன.
சிங்கப்பூர் மக்களின் மனோபாவம், இலக்கியங்கள் என எல்லாவற்றையும் பற்றி மாலன் எழுதியுள்ளார். சிங்கப்பூரை விட இந்தியா பல மடங்கு பெரிய நாடு. திறமைகள் அதிகம் இருந்தாலும், எதிர்பார்த்த வளர்ச்சியை இந்தியா எட்டாததற்கான காரணத்தை ஆசிரியர் கூறியுள்ளது மிகச் சிறப்பு.
இந்த புத்தகத்தை படித்தால், இந்தியாவும் சிங்கப்பூராக மாற வேண்டும் என, ஒவ்வொருவரது மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியாது.
– சங்கரசுப்பு