இந்நுாலின் ஆசிரியர் மூத்த தமிழறிஞர், தம் கருத்துகளை நடுநிலையோடு எடுத்துரைக்கும் ஆராய்ச்சி அறிஞர்.
தமிழ் வரலாறு என்ற இந்நுாலில், தமிழின் பல்வேறு பரிணாமங்களை அறிந்து கொள்ளும்படியான, ௧௯ கட்டுரைகள், ஆராய்ச்சி வழி வெளிப்பட்டிருக்கின்றன.
தமிழரின் பண்டைய வரலாறு, பண்பாடு, மொழி பற்றிய கட்டுரைகள் மிக ஆழமாகவும், விரிந்த தளத்திலும் பதிவாகி இருக்கின்றன.
நுாலாசிரியரின் ஆழ்ந்த புலமையை அறிந்து கொள்ளவும், தமிழின் மேன்மையை உணரவும் இந்நுால் வகை செய்கிறது.
அரிய செய்திகளை உள்ளடக்கிய ஆய்வு நுாலான இது, தமிழ் என்ற சொல்லையும், அதன் தனி நிலையையும், தமிழகத்தில் நிகழ்ந்த கடல் கோள்களையும், சங்கம் இருந்ததன் உண்மையையும் நடுநிலையோடு நின்று ஆராய்கிறது.
தமிழர் அசுரராகார் என்ற கட்டுரை, பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
தமிழர் கந்தருவ வழக்கினர் என்பதற்கான தக்க சான்றுகளை முன்வைத்திருப்பது எண்ணிப் பார்க்கத்தக்க ஒரு புதுப் பார்வை.
தமிழரின் கொள்கைகள், தமிழரின் தாயக் கொள்கை ஆகிய இரு கட்டுரைகளும் மிகுதியான செய்திகளை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்திருப்பதோடு, மிகுதி யான பக்கங்களையும் கொண்டுள்ளன.
இவ்விரண்டிலும் ஆசிரியர் காட்டியுள்ள மேற்கோள்கள், ஆசிரியரின் பன்னுால் பயிற்சியின் வெளிப்பாடு.
மக்கள் தாயமுறையை இத்தனை விரிவாக வரலாற்று நோக்கில் யாரும் வெளிப்படுத்தியதில்லை என்ற அளவுக்கு தமிழரின் தாயமுறையை விவரித்துள்ளார் ஆசிரியர்.
அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருப்பினும், பாணீனி காலத்தவராய், தமிழுணர்ந்தவராய் இருந்த அகத்தியர் ஒருவர் இருந்துள்ளமையை தெளிவுபடுத்துகிறார்.
தொல்காப்பியம் குறித்த ஆறு கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை. தொல்காப்பியர் சமணர் அல்லர் என்று நிறுவும் ஆசிரியர், வேத வழக்கொடுபட்ட நெறியினராகத் தொல்காப்பியரை காட்டியிருப்பது சிந்தனைக்குரியது.
தொல்காப்பியம் கூறிச் சென்றுள்ள இலக்கிய வகைமை பற்றிய கட்டுரை சிறப்பானது. தமிழ் ஆய்வுலகம் இந்நுாலைப் பெரிதும் வரவேற்கும்.
– ராம குருநாதன்