விருட்சம் என்றால் மரம் என்று பொருள். மரம் தன்னை வெட்டுவோனையும் கடைசி வரையில் நிழல் தந்து காப்பாற்றும். மரம் பல்வேறு நன்மைகள் செய்கிறது. உலகம் வாழ, உயிரினங்கள் வாழ உதவுகிறது.
விருட்சம் வெளியீடாக வரும் இந்தச் சிறுகதைகள் ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு, நல்ல கருத்துகளைக் கொண்டு முடிந்துள்ளன.
தவறும் தண்டனையும் என்ற தலைப்பில், உலகில் உலவும் போலிகளை வெளிச்சம் காட்டுகிறது. (பக். 39) நுாலின் பெயரைத் தாங்கி வரும் பதினொறாம் தலைப்பில், வாசகர்களை வியக்க வைக்கும் கருத்துச் செறிவுடையதாக விளங்குகிறது.
சித்தப்பா ஆதரவில் வளரும் பெண், சித்தப்பா கை காட்டிய மணமகனைத் திருமணம் செய்து, படும் பல துன்பங்கள், தனிக் குடித்தனம், கடைசி காலம் கிராமத்தில் கழித்தல், அன்பையும், உதவி யையும் பிறர் மகிழுமாறு செய்தல் என்ற நாவலுக்குரிய பல உத்திகள் காணப்படுகின்றன.
எக்காலத்திற்கும் பொருந்தும் தர்மத்தை, ‘வழங்க வளரும் நேயங்கள்’ என்ற கருத்தை இந்த நுால் வழங்குகிறது என்பதில் ஐயமில்லை.
– பேராசிரியர் இரா.நாராயணன்