சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அறிவதற்கும், அதற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவும், பிறருடன் கலந்துரையாடவும் இவ்வாறு பலவகையிலும் நமக்கு உதவுவது ஊடகங்களாகும், இதைப் பற்றிய விரிவான தகவல்களை நமக்கு இந்நுால் எடுத்துரைக்கிறது.
இந்நுாலில் ஊடகம் குறித்த விளக்கங்களும், ஒற்றர்கள், துாதர்கள், பறவைகள், பிற உயிரினங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், தெருக்கூத்து இவை போன்ற மரபு வழிப்பட்ட ஊடகங்களைப் பற்றிய செய்திகள், அச்சு ஊடகம், மின் ஊடகம், என ஊடகங்களைப் பற்றிய பொதுவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அச்சு வழி ஊடகங்களில் இதழ்கள் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதுடன், இதழ்களின் பல்வேறு வகைகள், இதழ்களின் பணி, செயல்பாடு, நடை என, பல்வேறு செய்திகளை இப்பகுதி விவரிக்கிறது.
வானொலி குறித்தும் தொலைக்காட்சி குறித்தும் அடுத்த பகுதி விரிவாக விவரிக்கிறது. இவை இரண்டின் தோற்றம் வளர்ச்சி, இடம்பெறும் நிகழ்ச்சிகள் என, பல செய்திகளை இப்பகுதியில் காணலாம்.
கணினி, இணையம் குறித்த தகவல்களை நான்காம் பகுதி விளக்குகிறது. இதில் இணைய இதழ்கள், அலைபேசி, குறுஞ்செயலி என, பல தகவல்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஊடகப்பணியாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஐந்தாம் பகுதி விவரிக்கிறது.
இவற்றை அடுத்துப் பிற்சேர்க்கையாக இதழ்கள் பற்றியும், வானொலி, தொலைக்காட்சி குறித்தும் பல முக்கியச் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களைப் பற்றிய தேவையான பல செய்திகளைப் பொதிந்து வைத்துள்ள இந்நுால், இத்துறையைப் பற்றி அறிய விரும்புவோருக்கும், இப்பணியில் ஈடுபட விழைவோருக்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் அமைந்து சிறக்கிறது. ‘ஊடகவியல்’ பல் ஊடகங்களைப் பற்றிய கருத்துச் சுரங்கம்.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்