தான் பார்த்ததை, ரசித்ததை, பழகி பிரமித்ததை, கலைமாமணி ஏ.ஆர்.சீனிவாசன் இந்த நுாலில் எழுதிய விதம், அனைவரையும் படிக்கத் துாண்டும்.
குறிப்பாக, சிவாஜி – எம்.ஜி.ஆர்., இணைந்து கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடித்தது, அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இரு தரப்பு ரசிகர்கள் மோதல் காரணமாக, அந்தப் படம் வெற்றி பெறவில்லை.
இருந்தாலும், அப்பட ஷூட்டிங் காலத்தில், டைரக்டர் ராமண்ணா, சிவாஜியை தனியாக அழைத்தார். அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சீன் காட்சிகளின் போது, ஏன் வெளியில் சென்று விடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு சிவாஜி, ‘ஷூட்டிங் பிரேக்கிங் போது, நான், ‘ஸ்மோக்’ பண்ண போய்விடுவேன்; அண்ணன் முன்னால், ‘சிகரெட்’ பிடிக்கிறது மரியாதை குறைவில்லையா’ என்று ஜென்டில் மேனாக பதிலளித்தார். இந்தக் கருத்து, பழைய நாகரிகப் பண்பாட்டைக் காட்டுவதாகும்.
தவிரவும் இப்புத்தகத்தில், 1936ம் ஆண்டில், நந்தனார் திரைப்படத்தில் ஆண் வேடமிட்டு நடிக்க, சிறந்த பாடலரசி, கே.பி.சுந்தராம்பாள், 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற அரிய தகவல் உண்டு. அதே போல, நவாப் ராஜமாணிக்கத்தின், நந்தனார் படத்தை காந்தியடிகள் பார்த்ததையும், அதில் நடந்த ருசிகர விஷயத்தையும் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.
பழைய விஷயங்கள் பல மறந்திருக்கலாம். ஆனால், அது குறித்த பல ஆவணக் கட்டுரைகள், இப்போது நல்லதொரு நுாலாக மலர்ந்திருக்கின்றன.