நுாலாசிரியர், மாத நாவல் உலகில் கொடி பொறித்து வெற்றியுடன் வலம் வருபவர்!
இதில், ஐந்து குறு நாவல்கள் இருக்கின்றன. முதல் நாவலான, ‘வான் கண்டேன்’ ஒரு காதல் கதை. ‘தந்திர பூமி’ – பத்திரிகையாளர் சுதந்திரத்தில் அரசியல் குறுக்கீடு பற்றிப் பேசும்.
இந்தத் தொகுதியில் உள்ள நாவல்களில் சிறந்தது, ‘பனி விழும் மலர்வனம்!’ ஒரு தொழிலதிபரை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறாள், அந்தப் பெண். கல்யாணம் ஆன பின் தான் தெரிகிறது, அவள் கணவன் ஏற்கனவே மணமானவன் என்று. பிரிந்து விடுகிறாள்...
தான் நேர்மையானவன்; முதல் மனைவி இறந்து விட்டாள் என்று தொழிலதிபர் நிரூபிக்கிறார். அவர் நல்லவர் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த பெண், தொழிலதிபருடன் ஒன்று சேர்ந்து, செயற்கரிய ஒரு தியாகத்தைச் செய்கிறாள். அருமையான பாத்திரப் படைப்பு. எல்லா நாவல்களுமே கதா சுவாரஸ்யம் மிகுந்தவை!
– எஸ்.குரு