இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர் கொண்டு அதன் அடக்கு முறையை வெளிப்படுத்தி, அதை கடந்து போகும் முயற்சி இது (பக்., 11) என்னும் நுாலாசிரியர், தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் விஷயங்கள் அறங்களில் உள்ளன.
அறம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம், சமண – பவுத்த அறம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், பக்தி இலக்கியங்கள் என ஒரு விரிவான ஆய்வை உள்ளடக்கி துறவறம், வணிக அறம், சான்றோர் அறமென வகைப்படுத்தி, இறுதியில் பாலியல் அறங்களில் நிறைவு செய்துள்ளார்.
இப்படி எண்ணற்ற நேர்ச்சைகளையும், நோன்புகளையும் பரிகாரம் தேடி அனுசரித்தால், செய்த பாவங்கள், பிடித்த தோஷங்கள், செய்த வினைகள் தீர்ந்துவிடும் என்று, வினைக் கொள்கையை இந்துக்கள் மிக எளிதாகக் கடந்து போகச் செய்துவிட்டது வைதீகம் (பக்., 232).
பெரியபுராணம் பற்றிய கருத்தில், பிராமணியம், வேளாளக் குடியானவரின் பொருளாதார பலத்தோடும், வைதீக கருத்தியல் வலிமையோடும் வணிகரை சமண பவுத்தத்தோடு புறம் தள்ளியதைப் பற்றிய ஆய்வு மேலும் தேவை (பக்., 304) என்று கூறும் நுாலாசிரியரின் இம்முயற்சி முற்றிலும் வித்தியாசமானது.
அறங்களை விட ஆசாரங்களே பிராமணியத்தால் வளைக்கப்பட்டோரின் ஆழ்மனங்களைக் கட்டிப் போட்டுள்ளன (பக்., 319).
எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்து வினைபுரிந்து கொண்டிருக்கிற பிராமணியத்தை இந்தியர்கள் எல்லாரும் சுட்டு எரித்தால் ஒழிய, ஏற்றத்தாழ்வுகளை உற்பத்தி செய்வதிலிருந்து அறங்களை அந்நியப்படுத்த இயலாது என்று முத்தாய்ப்பாய் ஆசிரியர் கூறுகிறார்.
பார்ப்பனர் என்ற தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதை வசைச் சொல்லாக ஒரு பகுதியினர் தவறாகச் புரிந்து கொண்டதால், பிராமணர் என்ற வடசொல்லே இந்நுாலில் கையாளப்படுகிறது (பக்., 8) என்ற கூற்று சற்று நெருடலாகவும், நுாலின் முக்கியத்துவத்திற்கு முரணாகவும் உள்ளது.