கிராம ஊராட்சியின் செயல்பாடு, திட்டங்களை அமல்படுத்துவதில் கடைப்பிடிக்கும் நடைமுறை விபரங்களை விளக்கும் எளிமையான கையேடு. விரிவாக, 43 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கிராம ஊராட்சிகளை நிர்வகிக்க, நிர்வாக அமைப்பு உள்ளது. பெரும்பான்மை மக்கள், கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்கள், சமூக, பொருளாதார ரீதியாக மேம்பட, இந்த அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.
உட்கட்டமைப்பு, குடிநீர் வழங்கல், சுகாதாரம், தெரு விளக்கு வசதி, வறுமை ஒழிப்பு போன்ற திட்டங்களை, ஊராட்சி நிர்வாகங்கள் செயல்படுத்துகின்றன. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பல, உள்ளாட்சி மூலமே அமலாக்கப்படுகின்றன.
உள்ளாட்சியில், ஊாராட்சி நிர்வாக அமைப்பு பற்றி விரிவாக பேசுகிறது இந்த புத்தகம். வரலாற்று பின்னணியுடன் துவங்குகிறது.
தமிழகத்தில் உத்திரமேரூர், சுந்தரவரதர் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, குடவோலை தேர்வு பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்ட முறைகளும் விளக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள் என விபரங்கள் அடுக்கமைவாக விளக்கப்பட்டுள்ளது. உரிய தலைப்புகளின் கீழ், எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர், பணியாளர்கள், கிராமப்புற சமூக செயல்பாட்டாளர் என அனைவரிடமும் இருக்க வேண்டிய கையேடு.
உள்ளாட்சி நிர்வாகத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துகிறது. கிராமசபை கூட்டத்தில் முறைப்படி கேள்வி எழுப்பி, வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்த விரும்புவோருக்கு உதவும்.
– அமுதன்