தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை தமிழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வாழ்க்கை முறையையும், வழிபாடுகளையும் கூறும் நுால்கள். சங்க இலக்கியங்கள் கற்பனை குறைந்து, உண்மைகள் மலிந்து கிடக்கும் வரலாற்றுப் பெட்டகங்கள் என்று முன்னுரையில் கூறுவதை அனைவரும் ஏற்பர்.
சங்க நுால்களில் காணக்கூடிய சமயக் கருத்துகள், தெய்வத் தத்துவங்கள், மூன்று சங்கங்கள் என்று பல தலைப்புகளில் அரிய கருத்துகளை விளக்குவது அருமை. எட்டுத்தொகை நுால்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுாறு, புறநானுாறு ஆகியவற்றிலும், பத்துப்பாட்டு நுால்களான திருமுருகாற்றுப்படை முதல், மலைபடுகடாம் வரை காணும் சமயக் கருத்துகளை எளிய முறையில் விளக்கியுள்ளார். மிகவும் பயனுள்ள நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து