மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார். காப்பியத்தின் சுருக்கத்தை உரைநடையில் வழங்கியுள்ளார். இந்த உரைநடையைப் படிக்கத் தொடங்கினால், காப்பியத்தை படிக்காமல் விடமாட்டார்கள்.
கவிதைப் பயண வரலாற்றுடன் அந்நாட்டு வளங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதற்காகப் புதுடில்லியில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட அனுபவங்களையும் எளிய கவிதையில் வடித்துள்ளார்.
விருத்தப் பாடலையும், வெண்பாவையும் எளிமையாக எழுதிப் பழக வேண்டும் என்றால், இந்த நூலை எடுத்துப் படித்தால் போதும். எளிய நடையில் படைத்துள்ளார். எல்லாப் பக்கங்களிலும் கவியருவி பாய்கிறது. கவிதை நடையில் அமைந்த தன்வரலாற்றுப் பெருங்காப்பியம்.
– முகிலை ராசபாண்டியன்