வால்மீகி எழுதிய காலம் தொட்டு, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் வெளியாகி விட்டது. சில பல மாறுதல்களுடன் கம்பர் எழுதிய பிறகு, தமிழறிஞர்கள் இதை அக்குவேறு ஆணி வேறாக ஆய்வு செய்து விட்டனர். இதே அளவுக்கு நல்லி குப்புசாமி செட்டியார், ராமாயணத்தை ஆய்வு செய்து எழுதியுள்ளதுடன், ஒவ்வொரு அத்தியாயத்திலும், அந்த சம்பவத்துக்கான அறத்தையும் எழுதி, மனித இனம் ராமனை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை சிறப்பாக காட்டியுள்ளார்.
ராமபிரான் பிறந்த தேதி, காட்டுக்குப் போனது, பட்டமேற்ற நாள் ஆகியவற்றை முன்னுரையிலேயே காட்டியுள்ளது அறியாத செய்தி. கதை, வசனம், இயக்கம் மந்தரை என்ற தலைப்பில் எழுதியுள்ள அறம், இன்றைய உலகுக்கு அவசியம்.
வெறுப்பின் நெருப்பு, கரும்பையும் இரும்பாக்கும். வெறுப்புக்கு ஒரு அற்ப காரியமே காரணமென்றாலும், அதன் விளைவு பயங்கரமாகி விடுகிறது என்ற அறம் பொன்னால் பொறிக்க வேண்டியது.
– தி.செல்லப்பா