ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதியிடம் வேதம் கற்று வந்தார் ராமானுஜர். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கங்கைக் கரைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற போது, நர்மதை ஆற்றங்கரையில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். உடனே தப்பி, மீண்டும் காஞ்சிபுரம் வந்தார். வழியில் வேட்டுவன் வடிவில் இறைவன் காத்த நிகழ்ச்சியை நாடகப் பாங்கில் படைத்து உள்ளார்.
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் பெற்ற மந்திரம், ‘ஓம் நமோ நாராயணாய’ என்பது. அதைக் கற்ற அடுத்த கணமே, சவுமிய நாராயண பெருமாள் திருக்கோவில் கோபுரத்தில் ஏறி நின்றார் ராமானுஜர். எல்லாரும் பேதம் இல்லாமல் அறிந்து கொள்ளும் வகையில் அந்தத் திருமந்திரத்தை அறிவித்தார். குருவுக்குக் கொடுத்த உறுதியிலிருந்து பிழைத்தாலும் உலகத்தார் அனைவருக்கும் உதவியதாக நினைத்தார். இதனால் தான், அவரை மதப் புரட்சி செய்த மகான் என்று போற்றுகின்றனர் என்ற உண்மை வரலாற்றைப் படைத்துள்ளார்.
ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எளிய தமிழில் அறிய உதவும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்