சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால்.
பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் அறிமுகப்படுத்தும் இலக்கியமாக சிலப்பதிகாரத்தின் பெருமை விளக்கப்படுகிறது.
கண்ணகி, மாதவி, கவுந்தி, சேரமாதேவி, வேண்மாள், மணிமேகலை, மாதரி, கோப்பெருந்தேவி ஆகிய மகளிரின் பெருமைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது சிறப்புற விளக்கப்பட்டுள்ளது.
ஒரு காப்பியத்தைச் சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்து, இலக்கியச் சமூகவியலுக்கு புதிய கருநிலைக் கோட்பாடுகளையும், கருத்துக் படிவங்களையும் அழுத்தமாக வழங்கியதன் அடிப்படையில், இந்நுால் மேலும் பல ஆய்வுகளில் பயன் தரக்கூடும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு