நம்மோடு பயணிப்பதாலேயே கடவுளும் நாமும் ஒன்றாகி விடுவதில்லை. சாயி கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர் மனிதரைப் போல வாழ்ந்தாலும் அப்பழுக்கில்லாத அதிசயப் பிறவி. முக்காலமும் உணர்ந்த ஈசன் அவதாரம். ஆனாலும், சக மனிதர்களோடு உலா வருகிறார். பக்தர்களுக்கு நண்பர்களாகிறார். நோய் தீர்க்கும் மருந்தாகிறார். பிறப்பின் நோக்கம் உணர்த்தும் கடவுளாகிறார்.
இந்த எளிய மனிதரின் எண்ணற்ற திருவிளையாடல்களை, அழகிய தமிழில் அருமையாக தொகுத்துள்ளார் ஆசிரியர் ராஜாராம். மொழிபெயர்ப்பு நாவலாக இருந்தாலும் பெயர்கள் மட்டும் தான் அன்னியப்படுத்துகின்றன. மற்றபடி, அவர்களின் உணர்வுகளை சாயியின் வார்த்தைகள் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது.
பக்திக்கு மொழி ஏது. பக்திக்கு உருவம் ஏது. அதனால் தான், சாயியின் சன்னிதியில் புலியும் அடைக்கலம் ஆகிறது; பூனையும் அடைக்கலம் ஆகிறது. படைத்தவனின் நோக்கம் சாயியின் புத்தகத்தை படிக்கும் போது நிறைவேறுகிறது.
– எம்.எம்.ஜெ.,