நொய்யல் ஆற்றின் நிலையை விளக்கும் நாவல். பல வண்ணச் சாயத்தில் ஊறப்போட்ட திரையில் எழுதியதைப் போல் முழுமையாகப் புரிந்து கொள்ளாதபடி சாயக்கலவையாய் ஓடும் நொய்யல் நதியும் அதுசேரும் அணைக்கட்டும் அதிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் பச்சை வண்ணத்தை இழந்து கறுப்பாகக் காட்சியளிக்கும் பயிர்களும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
திருப்பூரின் சாயக் கழிவுகள் எத்தகைய சூழலை ஏற்படுத்துகிறது என்பதை உள்ளது உள்ளபடி உணர்த்துகிறது. பக்தவச்சலம் என்னும் பாத்திரம், சாயத்திரைக்கு முன்னும் பின்னும் போடும் வேஷமாய் நாவல் நகர்கிறது. சாமியப்பன், நாகப்பன், ஜோதிமணி என வலம் வரும் அத்தனை பாத்திரங்களிலும் சாயம் ஒட்டியிருப்பது போன்றே தோன்றுகிறது. சவுண்டியம்மன் சப்பரப் புறப்பாடும் விளங்காத மொழியும் நம்மை எங்கேயோ இழுத்துச் செல்கின்றன.
இடையிடையே தலைமுறை வேறுபாட்டு நடைமுறைகளும் திரையில் தெரியும் கோடுகளாய் வந்து விழுகின்றன. நொய்யல் நதியின் பழைய கம்பீரத்தையும் பல வண்ணச் சாயக் கலவையால் அது கழிவுக் கலவை ஆனதையும் திரைப்படமாகக் காட்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்