சரணாகதி என்பதே ஸ்ரீமந் நாராயணீயத்தின் சாராம்சம். குருவை பீடித்த வாத நோயை தனக்கு மாற்றி, தன்னை வருத்திக் கொண்ட நாராயண பட்டத்திரி, அந்த நோயை குணமாக்குமாறு குருவாயூரப்பனை வேண்டுகிறார். 1034 ஸ்லோகங்கள் இயற்றி பாடப் பாட, குருவாயூரப்பன் சரியென்று தலையாட்டியதாக வரலாறு.
குழந்தைகளை கண்ணே, மணியே, என் செல்லமே... என்று கொஞ்சிக் கொஞ்சி, சீராட்டி பாராட்டுவதைப் போலிருக்கிறது ஸ்ரீமந் நாராயணீயம்.
பெருமாளின் ஒவ்வொரு அவதாரத்தையும் கதையாக விவரித்து, அந்த அவதாரத்தில் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளை ஸ்லோகங்களாக சொல்லிச் சொல்லி, சரிதானா நாராயணா... என்று கேட்பதும், நாராயணன் அதற்கு தலையாட்டி ஆமென்றதும், அதிசய நிகழ்வு தான்.
ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை, எளிய தமிழில் மொழிபெயர்த்திருப்பது, இந்நுாலின் சிறப்பு. கண்ணா... கோகுலத்தில் இப்படி இருந்தாயே... பாண்டவர்க்கு அருளினாயே... என் நோயை தீர்க்கமாட்டாயா என, பாடல்களின் முடிவில் கேட்பது, தகப்பனிடம் மகன் உரிமையோடு கேட்பது போலிருக்கிறது.
பாடல்களின் முடிவில், நாராயணன் நேரில் வந்து, அவரது வாத நோயை தீர்த்தது சிறப்பு. ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து, நாராயணன் அருள் பெறலாம்.
– எம்.எம்.ஜெ.,